Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானாக வரும்! ராஜ்நாத் சிங் நம்பிக்கை

ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானாக வரும்! ராஜ்நாத் சிங் நம்பிக்கை

ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானாக வரும்! ராஜ்நாத் சிங் நம்பிக்கை

ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானாக வரும்! ராஜ்நாத் சிங் நம்பிக்கை

ADDED : மே 29, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: ''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள், இந்திய குடும்பத்தின் ஒரு பகுதி. இதை உணர்ந்து அவர்கள் தாங்களாகவே வந்து சேருவர்'' என, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

டில்லியில் நேற்று நடந்த, சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழிலக கூட்டமைப்பின் வர்த்தக மாநாட்டில், பா.ஜ.,வைச் சேர்ந்த நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

பயங்கரவாதம் என்பது லாபகரமான தொழில் அல்ல என்பதை பாகிஸ்தான் புரிந்து கொண்டிருக்கும்.

மூளைச்சலவை

அதற்காக அந்த நாடு எவ்வளவு பெரிய விலையை கொடுக்க நேர்ந்துள்ளது. மேலும், பெரிய அளவில் இழப்புகளை சந்தித்துள்ளது.

பாகிஸ்தானுடன் இனி பேசுவதாக இருந்தால், அது பயங்கரவாதம் தொடர்பாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நம்மிடம் ஒப்படைப்பது தொடர்பாகவும் மட்டுமே இருக்கும்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது, இந்தியாவின் ஒரு பகுதியே. சில அரசியல் மற்றும் புவியியல் காரணங்களால் அது பிரிந்து உள்ளது.

அங்குள்ள பெரும்பாலான மக்கள், தற்போதும் இந்தியாவில் இணைந்திருக்கவே விரும்புகின்றனர். ஒரு சிலர்தான் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர்.

நடவடிக்கை

அங்குள்ள நம் சகோதர - சகோதரிகள் தங்களுடைய மனசாட்சியைக் கேட்டு நடந்தால், இந்த உண்மையை புரிந்து கொள்வர். அவர்கள் நம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். விரைவில் இந்திய குடும்பத்தில் தாங்களாகவே வந்து சேருவர்.

நம் ராணுவத்தின் பலத்தை உலக நாடுகளுக்கு காட்டியுள்ளோம். 10 ஆண்டுகளுக்கு முன், 1,000 கோடி ரூபாயாக இருந்த இந்தியாவின் ராணுவ ஏற்றுமதி தற்போது, 23,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு ராணுவத் தளவாடங்கள் மிகவும் சிறப்பானவை என்பதை, ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கைகள் மற்றும் அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் நடந்த மோதலில் காட்டியுள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

'ஒப்பந்தங்கள் போட்டும் தளவாடங்கள் கிடைப்பதில்லை'

இந்திய தொழிலக கூட்டமைப்பின் வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற நம் விமானப்படை தளபதி அமர் பிரீத் சிங் பேசியதாவது:உள்நாட்டில் ஆயுதங்கள், தளவாடங்களை தயாரிப்பதுடன், வடிவமைப்பும் இங்கே நடக்க வேண்டும். மாறி வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப நம்மை தயார் செய்துகொள்ள வேண்டும்.ராணுவத்துக்கான ஆயுதங்கள், தளவாடங்கள் கொள்முதலுக்காக பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்றன. ஆனால், தாமதங்களால் அவை கிடைப்பதில்லை. தேஜஸ் ரக போர் விமானங்கள், 83 வாங்குவதற்காக, 2021ல், 48,000 கோடி ரூபாய் மதிப்பில், எச்.ஏ.எல்., எனப்படும் 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ஒன்றுகூட கிடைக்கவில்லை.அதுபோல, அடுத்தநிலை போர் விமானங்களுக்கான மாதிரிகள் இன்னும் தயாராகவில்லை. இதுபோல, பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டும், ஆயுதங்கள், தளவாடங்கள் நம் படைகளுக்கு கிடைக்கவில்லை. எனக்கு நினைவு தெரிந்தவரை, எந்த ஒரு திட்டமும், குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்படவில்லை. குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க முடியாவிட்டால், அந்த ஒப்பந்தத்தை ஏன் ஏற்க வேண்டும்? இவ்வாறு அவர் பேசினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us