பா.ஜ., உட்கட்சி விவகாரம் பற்றி அறிக்கை கேட்டேனா?: பியூஷ் கோயல் மறுப்பு
பா.ஜ., உட்கட்சி விவகாரம் பற்றி அறிக்கை கேட்டேனா?: பியூஷ் கோயல் மறுப்பு
பா.ஜ., உட்கட்சி விவகாரம் பற்றி அறிக்கை கேட்டேனா?: பியூஷ் கோயல் மறுப்பு
ADDED : ஜூன் 13, 2024 12:28 PM

புதுடில்லி: தமிழக பா.ஜ., உட்கட்சி பூசல் மற்றும் பிரச்னைகள் பற்றி மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், விளக்க அறிக்கை கேட்டதாக வெளியான செய்தியை அவர் மறுத்துள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும், முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இந்த விவகாரம் டில்லி தலைமை வரை சென்றது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மாநில பா.ஜ.,வின் மையக் குழு உறுப்பினர்களிடம் உட்கட்சி பூசல் மற்றும் மாநில அளவில் உள்ள பிற பிரச்னைகள் குறித்து அறிக்கை கோரியதாக செய்தி வெளியானது.
இதனை பியூஷ் கோயல் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ''தமிழக பா.ஜ.,வில் நடக்கும் விஷயங்கள் குறித்து நான் விளக்க அறிக்கை கேட்டதாக வெளியான செய்தியை கண்டு அதிர்ச்சியடைந்தேன். இது முற்றிலும் புனையப்பட்ட செய்தி. நான் தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் இல்லை; அரவிந்த் மேனன்தான் பொறுப்பாளர். அப்படி இருக்கையில், நான் எப்படி அறிக்கை கேட்டிருப்பேன்?'' என்றார்.