இனி பா.ஜ.,வுக்கு ஆதரவு இல்லை: நவீன் பட்நாயக் திட்டவட்டம்
இனி பா.ஜ.,வுக்கு ஆதரவு இல்லை: நவீன் பட்நாயக் திட்டவட்டம்
இனி பா.ஜ.,வுக்கு ஆதரவு இல்லை: நவீன் பட்நாயக் திட்டவட்டம்
ADDED : ஜூன் 24, 2024 05:16 PM

புவனேஷ்வர்: தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாவிட்டாலும் அனைத்து விவகாரங்களிலும் பா.ஜ.,வுக்கு ஆதரவளித்துவந்த பிஜூ ஜனதா தளம், இனி பிரச்னை அடிப்படையில் கூட பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்காது என அக்கட்சி தலைவர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். அக்கட்சிக்கு ராஜ்யசபாவில் 9 எம்.பி.,க்கள் உள்ளனர்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் மற்றும் ஒடிசா சட்டசபை தேர்தலில் பிஜூ ஜனதா தளம் கட்சியை கடுமையாக விமர்சித்த பா.ஜ., லோக்சபாவில் மொத்தமுள்ள 21ல் 20 தொகுதிகளில் வெற்றிவாகை சூடியது. அத்துடன் 147 தொகுதிகள் அடங்கிய சட்டசபை தேர்தலில் 78 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. 25 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சி செய்துவந்த பிஜூ ஜனதா தளம், லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறவில்லை. சட்டசபை தேர்தலில், வெறும் 51 இடங்களையே கைப்பற்றியது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாவிட்டாலும் அனைத்து விவகாரங்களிலும் பா.ஜ.,வுக்கு, நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் ஆதரவு அளித்து வந்தது. ஆனால் தேர்தலில் பா.ஜ., தோற்கடித்ததால் பி.ஜ.த கட்சி கடும் கோபத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில், பிஜூ ஜனதா தளம் எம்.பி.,க்களுடன் நவீன் பட்நாயக் ஆலோசனை நடத்தினார். அப்போது, இனி பா.ஜ.,வுக்கு ஆதரவு இல்லை என நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
இது குறித்து எம்.பி.,க்கள் மத்தியில் நவீன் பட்நாயக் பேசுகையில், ''இனிமேல் பிரச்னை அடிப்படையில் கூட பா.ஜ.,வுக்கு ஆதரவு இல்லை. பிஜூ ஜனதா தளம் எம்.பி.,க்கள் ராஜ்யசபாவில் வலுவான மற்றும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். ஒடிசா மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை உரிய முறையில் பார்லி.,யில் எழுப்புவோம். ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தியும் குரல் எழுப்புவோம்'' எனப் பேசியுள்ளார்.
பா.ஜ., அரசு கொண்டுவரும் சட்டங்களுக்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை ஆதரவு தேவைப்படும்போது, இக்கட்சியின் 9 எம்.பி.,க்கள் ஆதரவு அளித்துவந்த நிலையில், தற்போது இந்த முடிவால் மத்திய பா.ஜ., அரசுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.