Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மோடி நடத்திய நிடி ஆயோக் கூட்டம் : மம்தா வெளிநடப்பு

மோடி நடத்திய நிடி ஆயோக் கூட்டம் : மம்தா வெளிநடப்பு

மோடி நடத்திய நிடி ஆயோக் கூட்டம் : மம்தா வெளிநடப்பு

மோடி நடத்திய நிடி ஆயோக் கூட்டம் : மம்தா வெளிநடப்பு

UPDATED : ஜூலை 27, 2024 11:54 PMADDED : ஜூலை 27, 2024 11:48 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி பிரதமர் தலைமையில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்தில் இருந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார். தன்னை பேச விடாமல் மைக் அணைக்கப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார். அப்படி நடக்கவில்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்தார்.

வரும் 2047ல் வளர்ச்சி அடைந்த நாடு என்ற இலக்கை எட்டுவது தொடர்பாக விவாதிக்க, நிடி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இந்த அமைப்பின் தலைவராக பிரதமரும், உறுப்பினர்களாக முதல்வர்களும் உள்ளனர்.

அவமதிப்பு


மத்திய பட்ஜெட்டில் தங்களுக்கு அநீதி இழைத்ததாகக் கூறி, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இக்கூட்டத்தை புறக்கணித்தனர்.

இண்டியா கூட்டணியில் உள்ள திரிணமுல் காங்கிரஸ் புறக்கணிக்கவில்லை. கூட்டத்தில் பங்கேற்று, மே.வங்க அரசின் எதிர்ப்பை பதிவு செய்யப்போவதாக அதன் தலைவர் மம்தா அறிவித்தார். அதன்படி கூட்டத்தில் பங்கேற்றார். ஆனால், சீக்கிரமாக வெளியே வந்துவிட்டார்.

நிருபர்களிடம் மம்தா கூறியதாவது:

கூட்டாட்சி தத்துவத்துக்கு கட்டுப்பட்டு, எங்களுடைய உரிமைகளை நிலைநாட்டுவதற்காக இந்த கூட்டத்தில் பங்கேற்றேன்.

ஆனால், இங்கேயும் மேற்கு வங்கம் புறக்கணிக்கப்பட்டுள்ளது; அவமதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 20 நிமிடம் பேசினார்.

அசாம், கோவா, சத்தீஸ்கர் முதல்வர்கள் 10 முதல் 12 நிமிடம் பேசினர். ஆனால், நான் பேச ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்தில் மைக்கை அணைத்துவிட்டனர். பேச்சை பாதியில் தடுத்ததால் வெளிநடப்பு செய்தேன்.

நிடி ஆயோக் அமைப்புக்கு நிதி அதிகாரம் எதுவும் இல்லை. எனவே, அது உருப்படியாக செயல்பட முடியாது.

ஒன்று, நிடி ஆயோக் அமைப்புக்கு நிதி அதிகாரம் அளிக்க வேண்டும் அல்லது முன்பிருந்த திட்டக்குழுவை உயிர்ப்பிக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தினேன்.

பா.ஜ.,வின் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு தாராளம் காட்டுவதை கூட நாங்கள் எதிர்க்கவில்லை. எங்களையும் கவனிக்க வேண்டும் என்று தான் கூறுகிறோம்.

இவ்வாறு மம்தா கூறினார்.

புகார் சொல்கிறார்


மம்தாவின் புகாரை நிதியமைச்சர் நிர்மலா மறுத்தார். ''பேச அனுமதிக்கவில்லை; மைக் அணைக்கப்பட்டது என்று மம்தா கூறியது உண்மை இல்லை. ஒவ்வொரு முதல்வருக்கும் பேசுவதற்கான நேரம் ஒதுக்கப்பட்டது.

''ஒதுக்கிய நேரம் எவ்வளவு? பேசிய நேரம் எவ்வளவு என்பதை, அவர்களுக்கு முன்னால் உள்ள திரையில் பார்க்கலாம். அப்படி இருந்தும் மம்தா புகார் சொல்கிறார்,'' என்றார் நிர்மலா.

மத்திய அரசின் பி.ஐ.பி., எனப்படும் பத்திரிகை தகவல் அமைப்பு, 'மம்தா பானர்ஜி கூறியுள்ளது, திசை திருப்பும் முயற்சியாகும். அவருக்கு ஒதுக்கிய நேரம் முடிந்துள்ளதை, அவர் இருக்கைக்கு முன் உள்ள திரை காட்டுகிறது' என அறிக்கை வெளியிட்டது.

மதியத்துக்கு மேல் தான் மம்தா பேசுவதாக இருந்தது. சீக்கிரம் கோல்கட்டா போக வேண்டியுள்ளது என அவர் கேட்டதால், ஏழாவது நபராக அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது என மத்திய அரசு அதிகாரிகள் கூறினர்.

10 முதல்வர்கள் பங்கேற்கவில்லை


நிடி ஆயோக் கூட்டம் குறித்து, அதன் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம் கூறியதாவது:பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில், தமிழகம், கேரளா, பஞ்சாப், ஜார்க்கண்ட், கர்நாடகா, ஹிமாச்சல், தெலுங்கானா உட்பட 1-0 மாநில முதல்வர்கள் பங்கேற்கவில்லை.

கூட்டத்தில் பங்கேற்காதது அவர்களுக்குத் தான் இழப்பு. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பேசுவதற்காக தரப்பட்ட நேரம் முடிந்தபோது, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மைக்கை அழுத்தியுள்ளார். உடனே, மம்தா பானர்ஜி பேசுவதை நிறுத்தி வெளிநடப்பு செய்தார். அதே நேரத்தில் மேற்கு வங்க அதிகாரிகள், கூட்டம் முடியும் வரை பங்கேற்றனர்.

சட்டசபை கூட்டம் நடப்பதால் பங்கேற்க முடியவில்லை என, பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். சிறையில் இருப்பதால் டில்லி முதல்வரும் வரவில்லை. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலங்களுக்கு இடையே போட்டி இருக்க

வேண்டும் என்றும், அனைத்து மாநிலங்களுக்கும் முதலீடுகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வறுமையை ஒழிப்பது தொடர்பாகவும் அவர் பேசினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

எழுதி வைத்த நாடகம்அரங்கேற்றம்


தேசிய அரசியலில் ராகுல் முன்னேறி வருவதை, சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அந்த பொறாமையால் தான், எதிர்க்கட்சி முதல்வர்கள் புறக்கணித்த கூட்டத்தில் மம்தா பங்கேற்றார்; ஏற்கனவே எழுதி வைத்திருந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.ஆதிர் ரஞ்சன் சவுத்ரிமூத்த தலைவர், காங்கிரஸ்

ஜெயலலிதா வழியில் மம்தா


டில்லியில் கடந்த 2012ல், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா பங்கேற்றார். அவர் பேசும்போதே, மணி அடித்து அவரை நிறுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.

இதனால் கோபமடைந்த ஜெயலலிதா, தன் எதிர்ப்பை பதிவு செய்துவிட்டு, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.

'மத்திய அரசுக்கு ஆதரவான முதல்வர்கள் பேச, 30 முதல் 35 நிமிடம் அனுமதிக்கப்படுகிறது. கடந்த மாநாட்டில் அசாம் முதல்வர் 35 நிமிடங்களுக்கு மேல் பேசினார். அப்போதெல்லாம் மணி அடிக்கவில்லை; நிறுத்த கட்டளையிடவில்லை. ஆனால், 10 நிமிடங்களானதும் என் பேச்சை நிறுத்துமாறு கூறி அவமானப்படுத்தி விட்டனர்' என, பேட்டியில் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

ஒரு முதல்வரை இப்படித்தான்நடத்துவதா?


இதுதான் கூட்டாட்சியா; ஒரு முதல்வரை இப்படித்தான் நடத்துவதா? எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தின் ஓர் அங்கம் என்பதை, மத்திய பா.ஜ., அரசு புரிந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒடுக்கி, அவர்களை எதிரிகள் போல் பார்க்கக்கூடாது. கூட்டாட்சியில்

அனைவருடைய கருத்துகளுக்கும், குரல்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். ஸ்டாலின்தமிழக முதல்வர்



நிதீஷ் மிஸ்ஸிங்!

கூட்டத்தில் தமிழக, கேரள, பஞ்சாப், ஜார்க்கண்ட், கர்நாடக, ஹிமாச்சல், தெலுங்கானா முதல்வர்கள் பங்கேற்கவில்லை. சிறையில் இருப்பதால் டில்லி முதல்வரும் வரவில்லை. பா.ஜ., கூட்டணியில் உள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, இதில் பங்கேற்க மாட்டேன் என்று அறிவித்திருந்தார். பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரும் வரவில்லை; பதிலாக, துணை முதல்வர்கள் இருவரையும் அனுப்பி இருந்தார். நிதீஷ் வராதது ஏன் என்ற காரணம் வெளியிடப்படவில்லை.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us