ஆசாத்பூர் மண்டியை சுற்றிலும் வாகன நெரிசல் புதிய திட்டத்தை விரைவில் அமல்படுத்த முடிவு
ஆசாத்பூர் மண்டியை சுற்றிலும் வாகன நெரிசல் புதிய திட்டத்தை விரைவில் அமல்படுத்த முடிவு
ஆசாத்பூர் மண்டியை சுற்றிலும் வாகன நெரிசல் புதிய திட்டத்தை விரைவில் அமல்படுத்த முடிவு
ADDED : ஜூன் 03, 2025 08:46 PM
புதுடில்லி,:டில்லியின் முக்கிய வணிக கேந்திரமான ஆசாத்பூர் மண்டியில் நிலவும் இடப்பற்றாக்குறையால் ஏற்படும், நெரிசல் விரைவில் தீர உள்ளது. அந்த பகுதியின் போக்குவரத்து நெரிசலை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஆளும் பா.ஜ., அரசு, அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது.
தலைநகர் டில்லியின் வடக்கு - மேற்கு டில்லியில் உள்ளது, ஆசாத்பூர் காய்கறி மற்றும் பழங்கள் மொத்த சந்தை. 76 ஏக்கரில் பரந்து, விரிந்துள்ள அந்த இடத்தை மேலும் விரிவாக்க, திக்ரி என்ற இடத்தில், 70 ஏக்கர் நிலம், 25 ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தப்பட்டது.
எனினும், அந்த செயல்பாடு பல காரணங்களால் நிறைவேறாமல் போயிற்று. அந்த இடத்தை, விவசாய பொருட்கள் மார்க்கெட்டிங் கமிட்டிக்கு கொடுக்க, டில்லி விவசாய பொருட்கள் மார்க்கெட்டிங் வாரியம் முன்வரவில்லை. இதனால், ஆசாத்பூர் மண்டியை சுற்றிலும் வாகன போக்குவரத்திற்கு சிக்கல் அதிகரித்து விட்டது.
ஏனெனில், அந்த மார்க்கெட்டிற்கு தினமும் வரும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் அந்த மொத்த சந்தையிலிருந்து பொருட்களை வாங்கிச் சென்று விற்கும் சிறு வணிகர்கள் நிறுத்தியுள்ள வாகனங்கள் என அந்த இடமே நெரிசலின் பிடியில் சிக்கி இருந்தது.
இப்போது, அந்த பகுதியில் நிலவும் நெரிசலை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு, டில்லியை ஆளும் பா.ஜ., அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதையடுத்து, 25 ஆண்டுகளாக முடங்கிப் போயுள்ள திட்டத்திற்கு உயிர் கொடுக்க முன்வந்துள்ள அதிகாரிகள், அதற்கான பணிகளில் ஜரூராக இறங்கியுள்ளனர்.
இதனால், ஆசாத்பூர் சுற்றி நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்பப்படுகிறது. மண்டிக்கு வரும் வாகனங்களை நிறுத்த போதுமான இடத்துடன் புதிய திட்டம் வரையப்பட்டுள்ளதால், ஆசாத்பூர் மண்டிக்கு வரும் வியாபாரிகள் மற்றும் சுற்று வட்டார மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.