நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக என்.டி.ஏ.,வுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி!: மோசடி நபர்களை கண்டுபிடிக்க முடியாவிட்டால் மறு தேர்வு
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக என்.டி.ஏ.,வுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி!: மோசடி நபர்களை கண்டுபிடிக்க முடியாவிட்டால் மறு தேர்வு
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக என்.டி.ஏ.,வுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி!: மோசடி நபர்களை கண்டுபிடிக்க முடியாவிட்டால் மறு தேர்வு
UPDATED : ஜூலை 09, 2024 05:41 PM
ADDED : ஜூலை 08, 2024 04:16 PM

புதுடில்லி: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது உண்மை என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இது தொடர்பாக பல்வேறு தகவல்களை கேட்டுள்ள அமர்வு, முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க முடியாவிட்டால், ஏற்கனவே நடந்த தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்றும் தெரிவித்தது.
நாடு முழுதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, மே 5ம் தேதி நடந்தது. இதன் முடிவு, ஜூன் 4ம் தேதி வெளியானது.இந்த தேர்வில், இதுவரை இல்லாத அளவுக்கு, 67 பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். அதிலும், ஒரு குறிப்பிட்ட தேர்வு மையத்தைச் சேர்ந்த ஆறு பேர் முதலிடத்தைப் பிடித்திருந்தனர்.இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிந்தது, ஆள் மாறாட்டம் நடந்தது என, பல முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
நடவடிக்கை
இந்த விவகாரம் தொடர்பான, 30க்கும் மேற்பட்ட வழக்குகளை தொகுத்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்துள்ளது உறுதியாகி உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசும், தேர்வை நடத்திய என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமையும் என்ன நடவடிக்கை எடுத்துள்ளன? இந்தத் தேர்வு, லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை தொடர்பானது.
நடந்தவற்றில் தங்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டாம். தேர்வை அரசு ரத்து செய்யாத நிலையில், மோசடிகளால் பலனடைந்தவர்களை அடையாளம் காண்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?நேர்மையாக தேர்வு எழுதியவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை ஏற்க முடியுமா?இந்த விவகாரத்தில், நாட்டின் எந்தெந்த பகுதிகளில் வினாத்தாள் கசிவு மோசடி நடந்தது என்ற தகவல் வேண்டும். அந்த கேள்வித்தாள் கசிவதற்கு அவர்கள் கையாண்ட வழிகள் என்ன என்பது தெரிய வேண்டும்.
எத்தனை பேர் இந்த மோசடியில் ஈடுபட்டு பலனடைந்துள்ளனர் என்பதை கண்டறிய வேண்டும். இவ்வாறு கண்டுபிடிக்க முடியாவிட்டால், மறு தேர்வு நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை.தேர்வு நடப்பதற்கு எத்தனை மணி நேரத்துக்கு முன் வினாத்தாள் கசிந்தது; எந்தெந்த வழிகளில் கசிந்தது என்ற தகவலும் வேண்டும். சமூக வலைதளங்கள் வழியாக கசிந்திருந்தால், அது பலருக்கும் சென்றிருக்க வாய்ப்பு உள்ளது. அந்த நிலையில், ஏற்கனவே நடந்த தேர்வை ரத்து செய்து, மறு தேர்வு நடத்துவதை தவிர வேறு வழியில்லை.
வினாத்தாள் கசிவு
இந்த வினாத்தாள் கசிவு மோசடி திட்டமிட்டு நடந்ததா; அது இந்த தேர்வின் நம்பகத்தன்மையை பாதித்துள்ளதா என்பதை பார்க்க வேண்டும். நேர்மையாக தேர்வு எழுதிய மாணவர்களிடம் இருந்து மோசடியில் ஈடுபட்ட மாணவர்களை பிரித்து பார்க்க என்ன வழிமுறைகள் உள்ளன என்ற தகவல் வேண்டும். அவ்வாறு பிரிக்க முடியாது என்றால், மறு தேர்வை தவிர வேறு வழியில்லை. இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டவர்களை எப்படி அடையாளம் காண்பது என்பதை தேசிய தேர்வு முகமை விளக்க வேண்டும். இதற்கென ஏதாவது வழிமுறைகளை அது வைத்துள்ளதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
அதுபோல், எந்தெந்த பகுதிகளில், எந்தெந்த தேர்வு மையங்களில் மோசடி நடந்தது என்பதை அவர்களால் அடையாளம் காண முடியுமா என்பதையும் தெரிவிக்க வேண்டும். நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்துள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது. இதை மறுக்க முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக பல்துறை நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்.
நீட் தேர்வில் நடந்துள்ள அனைத்து மோசடிகள் தொடர்பாகவும் விசாரிக்கும் சி.பி.ஐ., தன் விசாரணையின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்த அனைத்து தகவல்களின் அடிப்படையில், இந்தத் தேர்வில் நம்பகத்தன்மை இழந்திருந்தால், மறு தேர்வு நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
இதைத் தொடர்ந்து, 11ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.