ஒரே நாளில் இரு முறை பதவி ஏற்ற அமைச்சரால் சர்ச்சை
ஒரே நாளில் இரு முறை பதவி ஏற்ற அமைச்சரால் சர்ச்சை
ஒரே நாளில் இரு முறை பதவி ஏற்ற அமைச்சரால் சர்ச்சை
ADDED : ஜூலை 08, 2024 03:25 PM

போபால்: ம.பி., மாநிலத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த ராம்நிவாஸ் ராவத் என்ற எம்.எல்.ஏ., ஒரே நாளில் இரு முறை அமைச்சர் பதவி ஏற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ம.பி., மாநிலம் விஜய்பூர் தொகுதி எம்.எல்.ஏ., ராம்நிவாஸ் ராவத். காங்கிரசின் செயல் தலைவராக பதவி வகித்தார். சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார். அதேநேரத்தில் எம்.எல்.ஏ., பதவியை இன்னும் ராஜினாமா செய்யவில்லை.
இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் இணை அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் மங்குபாய் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆனால், அடுத்த 15 நிமிடங்களில் மீண்டும் அவர் கேபினட் அமைச்சராக பதவியேற்றார்.
முதலில் பதவியேற்ற ராம் நிவாஸ் ராவத், தவறுதலாக பதவி ஏற்றதால் அவர் மீண்டும் பதவியேற்றார் என தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் கூறும் போது, முதலில் பதவியேற்ற போது ஒரு வார்த்தையை தவற விட்டு விட்டதால், மீண்டும் பதவியேற்று கொண்டதாக கூறினார்.
ஒரே நாளில் இரண்டு முறை அவர் பதவியேற்றது தான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆக இருந்து கொண்டு அவர் எப்படி பா.ஜ., அமைச்சரவையில் இடம்பெற முடியும் என கேள்வி எழுந்துள்ளது.