'நீட்' - யு.ஜி., கவுன்சிலிங் ஒத்திவைப்பு :மத்திய அரசு குழப்பம்
'நீட்' - யு.ஜி., கவுன்சிலிங் ஒத்திவைப்பு :மத்திய அரசு குழப்பம்
'நீட்' - யு.ஜி., கவுன்சிலிங் ஒத்திவைப்பு :மத்திய அரசு குழப்பம்
UPDATED : ஜூலை 06, 2024 11:35 PM
ADDED : ஜூலை 06, 2024 11:31 PM

புதுடில்லி : 'நீட்' தேர்வு அடிப்படையில் நடைபெறும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில், 'அது தவறான தகவல்' என மத்திய அரசு தெரிவித்தது. இதனால், நீட் விவகாரத்தில் குழப்பம் அதிகரித்துள்ளது.
இளநிலை மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான தேசிய நுழைவுத்தேர்வு, 'நீட்' மே 5ல் நடந்தது. ஜூன் 4ல் வெளியான முடிவுகளில், இதுவரை இல்லாத வகையில், 67 மாணவர்கள், 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர்.
மேலும், குறிப்பிட்ட தேர்வு மையத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும், வினாத்தாள் கசிவு காரணமாக, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் சிலர் கைது செய்யப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சி.பி.ஐ., விசாரணை
நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், இது குறித்து விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
அதேநேரத்தில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், ஜூலை 6ல் துவங்கவிருந்த இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான கவுன்சிலிங்கை ஒத்தி வைக்கக் கோரியும், தேர்வெழுதிய மாணவர்கள் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அது விசாரணைக்கு வந்தபோது, சிறு எண்ணிக்கையிலான மாணவர்களே பிரச்னை எழுப்பி உள்ளதால், தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான கவுன்சிலிங்கை ஜூலை 6 முதல் நடத்த தயாராக இருப்பதாக நீட் தேர்வை நடத்தும் ஏஜன்சி தெரிவித்தது.
இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்க மறுத்து விட்டது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பான அனைத்து மனுக்களையும் ஜூலை 8ல் விசாரிப்பதாக தெரிவித்தது.
இதன் தொடர்ச்சியாக, கவுன்சிலிங் நேற்று துவங்கியிருக்க வேண்டும். ஆனால், நேற்று கவுன்சிலிங் நடக்காது என்றும், மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்படுவதாகவும் செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டன.
மறுப்பு அறிக்கை
இம்மாத இறுதியில் கவுன்சிலிங் துவங்க வாய்ப்பு இருப்பதாகவும், சில மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி கடிதம் வழங்கும் பணி இன்னும் நடந்து வருவதாகவும், கூடுதல் இடங்கள் சேர்க்கப்படலாம் என்றும் அந்த செய்தியில் கூடுதல் தகவல்கள் இடம் பெற்றிருந்தன.
ஊடகங்கள் வாயிலாக இச்செய்தி வேகமாக பரவிய நிலையில், மத்திய அரசு மறுப்பு அறிக்கை வெளியிட்டது. 'ஜூலை 6ல் கவுன்சிலிங் துவங்கும் என எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், ஊடகங்களில் கவுன்சிலிங் ஒத்திவைக்கப்படுவதாக செய்தி வெளியாகி உள்ளது.
'இந்த தகவல் தவறானது. கவுன்சிலிங் எப்போது துவங்கும் என்ற அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்' என அதில் அரசு தெரிவித்தது.
ஏற்கனவே பல புகார்களுக்கு இலக்கான நீட் தேர்வை அடுத்து, கவுன்சிலிங் தேதி குறித்த முரண்பாடான தகவல்கள் வெளியானதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் குழப்பம் அதிகரித்து உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நாளை நீட் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வரும்போது, தெளிவு கிடைக்கக்கூடும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மீண்டும் தேர்வு நடத்தணும்
நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும். அதுவும், வெளிப்படையான முறையில் ஆன்லைனில் நடத்த வேண்டும். அனைத்து தேர்வுகளின் வினாத்தாள் கசிவு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
கார்கே, காங்கிரஸ் தலைவர்