பாரம்பரியமும், நவீனமும் கைகுலுக்கும் 'நமோ காட்' ஆன்மிக சுற்றுலா வரைபடத்தின் தவிர்க்க முடியாத பெருமை
பாரம்பரியமும், நவீனமும் கைகுலுக்கும் 'நமோ காட்' ஆன்மிக சுற்றுலா வரைபடத்தின் தவிர்க்க முடியாத பெருமை
பாரம்பரியமும், நவீனமும் கைகுலுக்கும் 'நமோ காட்' ஆன்மிக சுற்றுலா வரைபடத்தின் தவிர்க்க முடியாத பெருமை
ADDED : ஜன 28, 2024 02:08 AM

நம் நாட்டின் ஆன்மிக மற்றும் கலாசார சுற்றுலா வரைபடத்தில் தவிர்க்க முடியாத தலமாக உருவெடுத்து வருகிறது, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள, 'நமோ காட்' என்ற இடம்.
வரலாற்று பெருமை வாய்ந்த நகரமான வாரணாசியில் கங்கை கரையோரத்தில், 84 படித்துறைகள் உள்ளன. இவை, 'காட்' என அழைக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை, புனித நீராடலுக்கும், சடங்கு சம்பிரதாயங்கள் செய்வதற்கும் பிரசித்தி பெற்றவை.
மணி கர்ணிகா காட், ஹரிச்சந்திரா காட் ஆகிய இரண்டு பழமைவாய்ந்த படித்துறைகள், இறந்தவர்களின் உடல்களை எரியூட்டுவதற்கு பயன்படுத்தப்படுபவை.
மணி கர்ணிகா என்றால், தமிழில் காதணி என அர்த்தம். பார்வதி தேவியின் காதணி தொலைந்த இடமாக இது நம்பப்படுகிறது. இதனால், இந்த படித்துறை மணி கர்ணிகா காட் என அழைக்கப்படுகிறது.
மணி கர்ணிகா படித்துறையை விட பழமையானது, ஹரிச்சந்திரா படித்துறை. இது, ஹரிச்சந்திர மஹாராஜா, விதிவசத்தால் ஆட்சி மற்றும் குடும்பத்தை இழந்து, இந்த படித்துறையில், உடல்களை தகனம் செய்பவராக பணியாற்றி வந்த இடமாக நம்பப்படுகிறது.
இப்படி, வாரணாசியில் உள்ள, 84 படித்துறைகளுக்கும் ஒரு வரலாறு உண்டு. இதில், 85வது படித்துறையாக இடம் பெற்றுள்ளது தான், நமோ காட்.
'கிட்கியா காட்' என அழைக்கப்பட்ட இடம் தான், தற்போது, 34 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு, வாரணாசியின் புகழ் பெற்ற ஆன்மிக சுற்றுலா தலமாக மாறியுள்ளது.
இதற்கான பணி, 2019ல் பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்டு, தற்போது நிறைவடைந்துள்ளது. 21,000 சதுர அடி பரப்பளவில், 1.7 கி.மீ., நீளத்துக்கு இந்த இடம் சீரமைக்கப்பட்டு, புதுப் பொலிவுடன் காட்சி தருகிறது. வாரணாசியில் உள்ள படித்துறைகளிலேயே மிகப் பெரியது இது தான்.
நமோ காட்டிற்கு சென்றதுமே, நம் கவனத்தை முதலில் ஈர்ப்பது, அங்கு அமைந்துள்ள மூன்று பிரமாண்டமான சிற்பங்கள் தான்.
இரண்டு கைகளையும் இணைத்து, வருவோரை, 'நமஸ்தே' என வணங்கி வரவேற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிற்பங்கள், காண்போரை சிலிர்க்க வைக்கின்றன.
நமஸ்தே என்ற வார்த்தையின் சுருக்கமாகத் தான், இந்த படித்துறைக்கு நமோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்ப்பரிப்பின்றி அமைதியாக ஓடும் கங்கை நதி, அதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள ரயில் மேம்பாலம், சுற்றுப் புறங்களில் நிறைந்துள்ள பசுமை, கூட்டம் கூட்டமாக பறந்து சென்று வசீகரிக்கும் பறவைக் கூட்டங்கள், காதில் ரீங்காரமிடும் அவற்றின் ஒலிகள் என, நம்மை ஒரு புதிய உலகத்திற்கே அழைத்துச் செல்கிறது நமோ காட்.
என்னென்ன வசதிகள்?
அதிகாலையிலும், காலையிலும் நடைபயிற்சி செய்வதற்கான நீண்ட நடைபாதை, தியானம், யோகா செய்வதற்கு வசதியான, அமைதி சூழ்ந்த இடங்கள், கங்கையின் அழகில் சூரிய உதயத்தை, அமர்ந்து ரசித்து பார்ப்பதற்கு வசதியான இடங்கள், படகுத்துறை, படகில் சென்று கங்கா ஆரத்தியை தரிசிப்பதற்கான வசதி ஆகியவை இங்கு உள்ளன.
வட மாநில உணவு வகைகள் மற்றும் நொறுக்கு தீனிகளை சுவைப்பதற்கான சிறிய மற்றும் பெரிய உணவகங்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கைவினைக் கலைஞர்களால் செய்யப்பட்ட கலைநயமிக்க பொருட்களின் விற்பனை அங்காடிகள் ஆகியவையும் உள்ளன.
இங்குள்ள கடைகளில் டீ, காபி ஆகியவை மண் குவளைகளில் விற்பனை செய்யப்படுவது சிறப்பு.
கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான காற்றோட்டமான திறந்த வெளி அரங்கு, சிறுவர்களுக்கான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள், நம் நாட்டின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் போற்றும் சுவரோவியங்களும் சுற்றுலா பயணியரை கவர்கின்றன.
தரிசன வசதி
காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்வதற்கான, 'சுகம் தர்ஷன்' டிக்கெட்டும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிக்கெட்டை வாங்கினால், இங்குள்ள படகு துறையிலிருந்து பக்தர்கள் படகுகளில் அழைத்துச் செல்லப்பட்டு, எளிதாக தரிசனம் செய்வதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.
'நமோ காட்'டில் பார்வையாளர்களை வசீகரிக்கும் சிற்பங்கள்.
சுற்றுலா பயணியரை கவரும் தொடர் வண்டி.
கங்கை கரையில் நடந்த தமிழக மாணவியரின் நாட்டிய நிகழ்ச்சி.
- நமது நிருபர் -