ADDED : ஜன 11, 2024 11:29 PM

நந்தகுடி: மாயமான பெண் சடலமாக மீட்கப்பட்டார். அவரது தலையில் கல்லை போட்டு மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர்.
பெங்களூரு ரூரல், ஹொஸ்கோட்டில் வசித்தவர் பாத்திமா, 50. ஆயத்த ஆடை தொழிற்சாலையில் வேலை செய்தார். கடந்த 5ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற பாத்திமா, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. பாத்திமாவை கண்டுபிடித்து தரும்படியும் ஹொஸ்கோட் போலீசில், குடும்பத்தினர் புகார் செய்தனர்.
இந்நிலையில், ஹொஸ்கோட் அருகே நந்தகுடியில் உள்ள தர்கா அருகே, முட்புதரில் உடல் அழுகிய நிலையில், பாத்திமாவின் உடல் நேற்று மீட்கப்பட்டது. அவரது தலையில் யாரோ கல்லை போட்டு கொலை செய்தது, தெரியவந்துள்ளது.
கொலையாளி யார், என்ன காரணம் என்று தெரியவில்லை. 'பாத்திமா யாருடனும் எந்த பிரச்னையும் செய்யாதவர். அவருக்கு யாரும் எதிரிகள் இல்லை' என்று, குடும்பத்தினர் ஆதங்கத்துடன் கூறினார்.
கடந்த மாதம் சம்பளம் தொடர்பாக, ஆயத்த ஆடை தொழிற்சாலை நிர்வாகத்திடம், பாத்திமா சண்டை போட்டது விசாரணையில் தெரிந்தது. இதனால் இந்த விவகாரத்தில் கொலை நடந்ததா என்றும் விசாரணை நடக்கிறது.