உலக நாடுகளுக்கு சென்று திரும்பிய எம்.பிக்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
உலக நாடுகளுக்கு சென்று திரும்பிய எம்.பிக்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
உலக நாடுகளுக்கு சென்று திரும்பிய எம்.பிக்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

புதுடில்லி: ' ஆபரேஷன் சிந்தூர் ' நடவடிக்கை தொடர்பாக உலக நாடுகளிடம் விளக்கமளிக்க வெளிநாடு சென்று திரும்பிய அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள் குழுவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப். 22-ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குல் நடத்தி 26 அப்பாவி உயிர்களை பறித்தனர். இதற்கு பதிலடியாக இந்திய நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் தவறான தகவலை பரப்பி வருவதை தடுத்திட மத்திய அரசு, தி.மு.க,வின் கனிமொழி, காங்., சசிதரூர் உள்ளிட்ட சர்வ கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பி வைத்தது.
மத்திய அரசு அமைத்த ஏழு குழுக்களில் நான்கு குழுக்களில் பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிவசேனா எம்.பி.,க்கள் இடம்பெற்றனர். மற்ற மூன்று குழுக்களில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ், திமுக, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் இடம்பெற்றனர்.
பாஜ., எம்.பி., பைஜெயந்த் பாண்டா தலைமையிலான முதல் குழு சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், அல்ஜீரியாவுக்கும்
பா.ஜ., எம்.பி., ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான 2வது எம்.பி.,க்கள் குழு பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய யூனியன், இத்தாலி மற்றும் டென்மார்க்குக்கும்
ஐக்கிய ஜனதா தளத்தின் சஞ்சய் குமார் ஜா தலைமையிலான 3வது குழு இந்தோனேஷியா, மலேசியா, கொரியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கும்
சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான 4வது குழுவினர் லைபீரியா, காங்கோ, சியாராலியோனுக்கும்
காங்., எம்.பி.,சசி தரூர் தலைமையிலான 5வது குழு அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில் மற்றும் கொலம்பியாவுக்கும்
திமுக எம்.பி., கனிமொழி தலைமையிலான 6வது குழு ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லாட்வியா மற்றும் ரஷ்யாவுக்கும்,
சுப்ரீயா சுலே தலைமையிலான 7 வது குழு எகிப்து, கத்தார், எத்தியோப்பியா மற்றும் தென் ஆப்ரிக்காவுக்கும் சென்றனர்.
இவ்வாறு உலக நாடுகளுக்கு சென்று திரும்பிய எம்.பி.,க்கள் குழுவினரை சில நாட்களுக்கு முன்னர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, அவர்களின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், எம்.பி.,க்கள் குழுவினர் டில்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
பா.ஜ., எம்.பி.,க்கள் ரவிசங்கர் பிரசாத், பங்னோன் கோன்யாக்,
அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை,
ராஜ்யசபா எம்.பி., ரேகா சர்மா,
தி.மு.க., எம்.பி., கனிமொழி
காங்கிரஸ் எம்.பி.,க்கள் மணீஷ் திவாரி, பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அவர்களுக்கு பிரதமர் மோடி விருந்து அளித்தார். உலக நாடுகளுக்கு சென்ற போது, ஏற்பட்ட அனுபவங்களை எம்.பி.,க்கள் பகிர்ந்து கொண்டனர்.