அபராத தொகை தள்ளுபடி செய்ய ரூ.1 லட்சம் லஞ்சம் பேரம் : உ.பி.,யில் ஜி.எஸ்.டி., மேற்பார்வையாளர் கைது
அபராத தொகை தள்ளுபடி செய்ய ரூ.1 லட்சம் லஞ்சம் பேரம் : உ.பி.,யில் ஜி.எஸ்.டி., மேற்பார்வையாளர் கைது
அபராத தொகை தள்ளுபடி செய்ய ரூ.1 லட்சம் லஞ்சம் பேரம் : உ.பி.,யில் ஜி.எஸ்.டி., மேற்பார்வையாளர் கைது
ADDED : ஜூன் 10, 2025 08:15 PM

புதுடில்லி: தனியார் நிறுவனத்திற்கு அபராதம் தள்ளுபடி செய்வதற்காக ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றதாக உ.பி.,யில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி கண்காணிப்பாளரை சி.பி.ஐ., கைது செய்தது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள அம்ரோஹாவின் கஜ்ரௌலாவில் நிஷான் சிங் மல்லி, ஜி.எஸ்.டி., மேற்பார்வையாளராக கூடுதல் பொறுப்பில் பணியமர்த்தப்பட்டார். இந்நிலையில் தொழிலதிபர் ஒருவர் தனது நிறுவனத்திற்கு ஜி.எஸ்.டி., வரி அபராத தொகை செலுத்துமாறு நோட்டீஸ் வந்த நிலையில், தனது நிறுவனத்திற்கு அபராதத்தை தள்ளுபடி செய்ய அதிகாரி நிஷான் சிங் மல்லியை அணுகினார். இதை பயன்படுத்திக்கொண்ட நிஷான் சிங் மல்லி, வரி வழக்கறிஞர் அமித் கண்டேல்வாலுடன் கூட்டு சேர்ந்து தொழிலதிபரிடம் ரூ.4 லட்சம் கேட்டுள்ளார். முதல் தவணையாக ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் லஞ்சம் கொடுக்க தயங்கிய தொழிலதிபர், சி.பி.ஐ.,யிடம் புகார் அளித்தார்.
இது தொடர்பாக சி.பி.ஐ., செய்தி தொடர்பாளர் கூறியதாவது:
புகாரை தொடர்ந்து நிஷான் சிங் மல்லியை கைது செய்து விசாரணை நடத்தினோம். அவரது வீட்டு வளாகத்தில் சோதனை செய்தோம். இந்த சோதனையில், அவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் உள்ள கோடிக்கணக்கிலான மதிப்புள்ள 17 சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தோம்.
இந்த சொத்துக்களில் காஜியாபாத் மற்றும் மொராதாபாத்தில் உள்ள மூன்று குடியிருப்பு அடுக்குமாடி குடியிருப்புகள், மொராதாபாத்தில் ஒரு வணிகக் கடை; ராம்பூர் மற்றும் கஜ்ரௌலாவில் 12 குடியிருப்பு அடுக்குமாடி குடியிருப்புகள் அடங்கும். மேலும் அவரது பெயரில் உள்ள ஒரு கிரெட்டா வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறு சி.பி.ஐ., செய்தி தொடர்பாளர் கூறினார்.