விமான விபத்து இடத்தை பார்வையிட்டார் மோடி கற்பனை செய்ய முடியாத துயரம் என வேதனை
விமான விபத்து இடத்தை பார்வையிட்டார் மோடி கற்பனை செய்ய முடியாத துயரம் என வேதனை
விமான விபத்து இடத்தை பார்வையிட்டார் மோடி கற்பனை செய்ய முடியாத துயரம் என வேதனை
ADDED : ஜூன் 14, 2025 02:18 AM

ஆமதாபாத்: ஆமதாபாதில் விமான விபத்து நடந்த இடத்தை நேற்று பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த விஷ்வாஸ் குமார் மற்றும் படுகாயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள லண்டனுக்கு, 'ஏர் இந்தியா' நிறுவனத்தின், 'போயிங் 787 - ட்ரீம்லைனர்' விமானம் நேற்று முன்தினம் மதியம் 1:38 மணிக்கு புறப்பட்டது. 800 அடி உயரம் மட்டுமே பறந்த விமானம், அடுத்த சில நிமிடங்களில், அருகே உள்ள பி.ஜே., மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் விழுந்து நொறுங்கியது.
அதிர்ச்சி
இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணித்த ஒருவர் தவிர, 241 பேர் பலியாகினர்.
இதில், பா.ஜ., முத்த தலைவரும், குஜராத் முன்னாள் முதல்வருமான விஜய் ரூபானியும் அடங்குவார்.
விமானம் விழுந்து நொறுங்கிய மருத்துவக் கல்லுாரி கட்டடத்தின் மேல் தளத்தில் இயங்கி வந்த கேன்டீனில், சாப்பிட்டுக் கொண்டிருந்த டாக்டர் உள்ளிட்ட ஐந்து மருத்துவ மாணவர்களும், விபத்தில் உடல் கருகி உயிரிழந்தனர்.
மொத்தம், 265 பேரை காவு வாங்கிய இந்த விபத்து, இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், விபத்து நடந்த பகுதியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நேரில் பார்வையிட்டார்.
ஆமதாபாதின் சர்தார் வல்லபபாய் படேல் விமான நிலையம் சென்ற அவர், அங்கிருந்து நேராக விபத்து நடந்த மேகனி நகருக்கு காரில் சென்றார். பிரதமருடன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் சென்றார்.
பி.ஜே., மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் விமானம் விழுந்து நொறுங்கிய பகுதியில், 20 நிமிடங்களுக்கு மேலாக பார்வையிட்டு விபரங்களை கேட்டறிந்தார்.
விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு மற்றும் குஜராத் உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் பிரதமரிடம் விபத்து குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் பற்றியும் விளக்கினர்.
அங்கிருந்து புறப்பட்ட மோடி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பிரிட்டன் குடியுரிமை பெற்ற விஷ்வாஸ் குமாரை சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும், 50க்கும் மேற்பட்டோரையும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களையும் அவர் சந்தித்து பேசினார்.
ஆறுதல்
இதைத் தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, 'விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டேன்.
பேரழிவு நடந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
'அயராது உழைக்கும் அதிகாரிகளை சந்தித்தேன். கற்பனை செய்ய முடியாத துயரத்தில் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் என் எண்ணங்கள் உள்ளன. துயரமடைந்த அனைத்து குடும்பங்களுக்கும் இரங்கல்கள் தெரிவித்துக் கொள்கிறேன்' என, தெரிவித்துள்ளார்.