Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/நாட்டு வளர்ச்சியில் ஊடகங்கள் பங்களிப்புக்கு மோடி பாராட்டு!: வளர்ந்த நாடு இலக்கை எட்டுவதற்கு உதவ அழைப்பு

நாட்டு வளர்ச்சியில் ஊடகங்கள் பங்களிப்புக்கு மோடி பாராட்டு!: வளர்ந்த நாடு இலக்கை எட்டுவதற்கு உதவ அழைப்பு

நாட்டு வளர்ச்சியில் ஊடகங்கள் பங்களிப்புக்கு மோடி பாராட்டு!: வளர்ந்த நாடு இலக்கை எட்டுவதற்கு உதவ அழைப்பு

நாட்டு வளர்ச்சியில் ஊடகங்கள் பங்களிப்புக்கு மோடி பாராட்டு!: வளர்ந்த நாடு இலக்கை எட்டுவதற்கு உதவ அழைப்பு

ADDED : ஜூலை 13, 2024 11:18 PM


Google News
Latest Tamil News
மும்பை: ''நம் நாடு கண்ட ஏற்ற இறக்கங்களின்போது, உடனிருந்து வழிநடத்திய பத்திரிகைகள், 'விக் ஷித் பாரத்' எனப்படும் வளர்ந்த நாடு என்ற இலக்கை எட்டுவதிலும் முக்கிய பங்காற்ற வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

ஐ.என்.எஸ்., எனப்படும் இந்திய செய்தித்தாள் சொசைட்டியின் புதிய கட்டடத் திறப்பு விழா மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று நடைபெற்றது.

சங்கத்தின் உறுப்பினர்களுக்கு புதிய நவீன வசதிகளுடன் கூடிய அலுவலக வசதியை அளிக்கும் வகையிலான இந்த கட்டடத்தை திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் உருவாக்கப்பட்டது, இந்த சொசைட்டி. நாட்டின் பயணத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை இதுபார்த்துள்ளது.

பங்களிப்பு


மேலும், அந்த பயணத்தில் இணைத்துக் கொண்டு, மக்களுக்குத் தேவையான தகவல்களை அளித்து வந்துள்ளது. அதன் பங்களிப்பை இந்த நாடு பார்த்துள்ளது.

ஊடகங்கள், நம் நாட்டில் நடப்பவற்றை வெறும் பார்வையாளராக இல்லாமல், மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய பங்களிப்பை அளித்து வந்துள்ளன.

நாம் 'விக் ஷித் பாரத்' எனப்படும் வளர்ச்சி அடைந்த நாடு என்ற இலக்கை நோக்கி செல்கிறோம். அடுத்த, 25 ஆண்டுகளில் இந்த இலக்கை எட்டுவதில், ஊடகங்களுக்கு மிகப் பெரும் பங்கு உள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனை பெரும் வெற்றி பெற்றதில் இந்த பங்களிப்பை நாம் நேரடியாக கண்டுள்ளோம். நம் நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டமைப்பு மிகவும் வலுவாக அமைத்துள்ளது.

பல உலக நாடுகளும் இதில் ஆர்வம் காட்டுகின்றன. இந்த வெற்றியில் ஊடகங்களின் பங்களிப்பு அளப்பரியது.

எந்த ஒரு விஷயத்தையும் ஒரு விவாதப் பொருளாக மாற்றுவதில் ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் இயற்கையானது. அதனால்தான், அரசின் எந்த ஒரு கொள்கை திட்டமும், ஊடகங்களுடன் தொடர்புடையதாக உள்ளது.

ஜன்தன் திட்டம் வாயிலாக அனைத்து மக்களுக்கும் வங்கிக் கணக்கை அளிக்கும் திட்டத்தை துவக்கினோம். இதன் வாயிலாக, ஊழல், லஞ்சத்தை தடுப்பதே அரசின் நோக்கமாகும்.

அதுபோலவே, துாய்மை இந்தியா திட்டம், ஸ்டார்ட்அப் என, எந்த ஒரு திட்டத்தின் வெற்றியாக இருந்தாலும், அது தொடர்பாக விவாதத்தை உருவாக்கி ஊடகங்கள் வெற்றி பெற வைத்துள்ளன.

இந்த சொசைட்டியின் வழிகாட்டுதல்களே ஊடகங்களை வழிநடத்துகின்றன. அதுபோலவே, எந்த ஒரு திட்டமாக இருந்தாலும், அது அரசுடைய திட்டம் மட்டும் அல்ல, மக்களின் திட்டமாகும்.

நாட்டின் 75வது சுதந்திர தினம், வீடுதோறும் தேசியக் கொடி என, மத்திய அரசின் பல்வேறு அழைப்புகள், முயற்சிகள், தேசிய இயக்கமாக மாறின.

பெரும் உதவி


இயற்கையை, சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது, அரசியலுக்கு அப்பாற்பட்ட அரசின் முயற்சிகளாகும். தற்போது தாயின் நினைவாக ஒரு மரம் நடுவோம் என்ற இயக்கத்தை துவக்கியுள்ளோம்.

இது உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோன்ற திட்டங்களை, அரசின் முயற்சிகளை மக்களிடையே கொண்டு சென்று, அரசுக்கும், மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக ஊடகங்கள் உள்ளன.

நம் அரசியலமைப்பு சட்டத்தின், 75வது ஆண்டை கொண்டாட உள்ளோம். இந்த நேரத்தில், மக்களுக்கு அவர்களுடைய உரிமைகளுடன், அவர்களுடைய கடமையையும் சுட்டிக் காட்ட வேண்டியது ஊடகங்களின் பொறுப்பாகும்.

நம் நாட்டின் சுற்றுலாவை பிரபலப்படுத்துவதிலும் ஊடகங்களின் பங்களிப்பு தேவை.

ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவை குறித்து உங்களுடைய வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதன் வாயிலாக நாடு முழுதும் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடையும்.

சர்வதேச அளவிலும் நம் ஊடகங்கள் வளர்ச்சியை எட்ட வேண்டும், விரிவுபடுத்த வேண்டும். நம் நாட்டின் வெற்றியை உலகெங்கும் கொண்டு செல்வதற்கு ஊடகங்கள் பங்களிக்க வேண்டும். சர்வதேச அரங்கில் ஒரு நாடு குறித்த பிம்பம், அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்தது.

தற்போதுள்ள பல தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, உலகெங்கும் உங்களுடைய இருப்பை விரிவுபடுத்திக் கொள்ளுங்கள். ஐ.நா.,வில் உள்ள மொழிகளில் உங்களுடைய பதிப்புகளை வெளியிட முயற்சிக்கவும்.

சமூக ஊடகங்களில் செயல்படுவதற்கு என, எந்த ஒரு வரம்புகளும் இல்லை. அதனால், இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதற்கு ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு பெரும் உதவி செய்யும்.

என்னுடைய ஆலோசனைகளை ஊடகங்கள் ஏற்கும் என்று எதிர்பார்க்கிறேன். உங்களுடைய ஆலோசனைகள், முயற்சிகளால், நாட்டின் ஜனநாயகம் வலுப்படும். எந்தளவுக்கு நீங்கள் வலுவாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நாடும் வளர்ச்சி அடையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மஹாராஷ்டிர கவர்னர் ரமேஷ் பயஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, இந்திய செய்தித்தாள் சொசைட்டி தலைவர் ராகேஷ் சர்மா, 'தினமலர்' நாளிதழ் வெளியீட்டாளரும், ஐ.என்.எஸ்., நிர்வாகக் குழு உறுப்பினருமான எல்.ஆதிமூலம் மற்றும் ஐ.என்.எஸ்., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வேலைவாய்ப்பில் புதிய சாதனை

மஹாராஷ்டிராவில், 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சாலை, ரயில்வே உள்ளிட்ட துறைகளில் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டியும், முடிந்த திட்டங்களை துவக்கி வைத்தும் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:தேசிய ஜனநாயகக் கூட்டணியால் தான், வலுவான, ஸ்திரமான நிர்வாகம் வழங்க முடியும் என்பதை மக்கள் நம்புகின்றனர். சிறிய மற்றும் பெரிய முதலீட்டாளர்கள், மூன்றாவது முறையாக நாம் ஆட்சி அமைத்துள்ளதை வரவேற்றுள்ளனர்.ரிசர்வ் வங்கி சமீபத்தில் விரிவான ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், கடந்த, மூன்று - நான்கு ஆண்டுகளில் மட்டும், புதிதாக, எட்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வேலைவாய்ப்பின்மை தொடர்பாக தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து வந்த எதிர்க்கட்சிகளின் வாயை இது அடைத்துள்ளது. அவர்களுடைய பொய் பிரசாரங்கள் அம்பலமாகி உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us