பொங்கல் பண்டிகை வரை ம.ஜ.த., அரசியல் பணிகள் நிறுத்தம்
பொங்கல் பண்டிகை வரை ம.ஜ.த., அரசியல் பணிகள் நிறுத்தம்
பொங்கல் பண்டிகை வரை ம.ஜ.த., அரசியல் பணிகள் நிறுத்தம்
ADDED : ஜன 05, 2024 04:34 AM
பெங்களூரு : 'பொங்கல் பண்டிகை முடியும் வரை, லோக்சபா தேர்தல் முன்னேற்பாடு உட்பட எந்த அரசியல் தொடர்பான பணிகளையும் செய்வதில்லை' என, ம.ஜ.த., முடிவு செய்து உள்ளது.
கர்நாடக ம.ஜ.த., லோக்சபா தேர்தலுக்கு, முன்னேற்பாடுகளை துவக்கியது. மாநில தலைவர் குமாரசாமி, ம.ஜ.த., போட்டியிடும் தொகுதிகளின் தலைவர்களுடன், முதற்கட்ட ஆலோசனை நடத்தி உள்ளார். லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி, பிரசார திட்டங்கள் குறித்து ஆலோசித்து உள்ளார்; தேவையான உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.
கர்நாடகாவின், நான்கைந்து தொகுதிகளில் மட்டுமே போட்டியிட, ம.ஜ.த., முடிவு செய்துள்ளது. மற்ற தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு ஆதரவளிக்கும். ம.ஜ.த.,வுக்கு செல்வாக்கு அதிகம் உள்ள ஹாசன், மாண்டியா, கோலார், துமகூரு தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது.
இந்த தொகுதிகளில் திறமையான வேட்பாளர்களை களமிறக்க, அக்கட்சி திட்டமிட்டுள்ளது. குமாரசாமி அந்தந்த தொகுதிகளின் தலைவர்களுடன் ஆலோசித்து, கருத்து கேட்டறிகிறார்.
லோக்சபா தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க, சமீபத்தில் டில்லி சென்ற குமாரசாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். ஆனால், பணி நெருக்கடியால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முடியவில்லை.
தற்போது, அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா பணிகளில், பா.ஜ., தலைவர்கள் பரபரப்பாக உள்ளனர். எனவே பொங்கல் பண்டிகை முடியும் வரை, அரசியல் பணிகளை ஒத்திவைக்க ம.ஜ.த., முடிவு செய்துள்ளது. கூட்டம், நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யவில்லை.
கொப்பரை தேங்காய்க்கு ஆதார விலையை அறிவிக்க வலியுறுத்தி அரசிகெரேவில் இருந்து, துமகூரு வரை பாதயாத்திரை நடத்த, குமாரசாமி திட்டமிட்டிருந்தார்.
கொப்பரைக்கு ஆதார விலையை மத்திய அரசு அறிவித்ததால், பாதயாத்திரையை கைவிட்டு உள்ளார்.