லோக்சபா தேர்தலில் மகனுக்கு சீட் அமைச்சர் மகாதேவப்பா சூசகம்
லோக்சபா தேர்தலில் மகனுக்கு சீட் அமைச்சர் மகாதேவப்பா சூசகம்
லோக்சபா தேர்தலில் மகனுக்கு சீட் அமைச்சர் மகாதேவப்பா சூசகம்
ADDED : பிப் 10, 2024 06:14 AM

மைசூரு: ''லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடுவதாக கூறுவது கட்டுக்கதை. வெற்றி பெறும் திறன் கொண்ட வேட்பாளர்கள் களமிறக்கப்படுவர்,'' என சமூக நலத்துறை அமைச்சர் மகாதேவப்பா தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தலுக்கு, காங்கிரஸ் தயாராகி வருகிறது. அமைச்சர்களை களமிறக்குவது குறித்து, ஆலோசிக்கவில்லை. அமைச்சர்கள் போட்டியிட வேண்டும் என, வலியுறுத்தவும் இல்லை. வெற்றி பெறும் திறன் அடிப்படையில், வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நான் லோக்சபா தேர்தல் வேட்பாளர் அல்ல. இது வெறும் கட்டுக்கதை. யார் வேட்பாளரானாலும், அவர்களின் வெற்றிக்காக உழைப்பேன். என் மகன் சுனில் போஸ், கட்சி தொண்டன். அவருக்கு மூன்று சட்டசபை தேர்தலிலும், சீட் கொடுக்கவில்லை. ஆனாலும் வருந்தாமல் கட்சியின் நலனுக்காக பணியாற்றுகிறார்.
சுனில் போசை விட இளையவர்கள், கட்சியின் உறுப்பினர் அல்லாதோர் காங்கிரசில் எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். என் மகனுக்கு சீட் அளிக்கும்படி, என்றுமே நான் சிபாரிசு செய்தது இல்லை.
நஞ்சன்கூடு தொகுதியில் சீட் எதிர்பார்த்த துருவ நாராயணா திடீரென காலமான போது, அவரது மகன் தர்ஷனுக்கு சீட் அளிக்கும்படி சிபாரிசு செய்தேன். சுனில் போசும் இதையே கூறினார்.
எங்கள் கட்சியின் உறுப்பினர் அல்லாத களலே கேசவமூர்த்தியை, காங்கிரசுக்கு அழைத்து வந்து, நஞ்சன்கூடு இடைத்தேர்தலில் களமிறக்கினேன். இவருக்காக பணியாற்றி, சுனில் வெற்றி பெற வைத்தார்.
வேட்பாளர்கள் தேர்வு விஷயத்தில், காங்கிரஸ் தேர்தல் கமிட்டி எடுக்கும் முடிவே இறுதியானது. இதுவரை கமிட்டி கூட்டம் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.