கொரோனாவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை பதற்றம் வேண்டாம் என்கிறார் அமைச்சர் தினேஷ்
கொரோனாவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை பதற்றம் வேண்டாம் என்கிறார் அமைச்சர் தினேஷ்
கொரோனாவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை பதற்றம் வேண்டாம் என்கிறார் அமைச்சர் தினேஷ்
ADDED : ஜன 11, 2024 03:44 AM

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனாவை கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் ஜே.என்.1 வகை கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து, சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தலைமையில், அமைச்சரவை துணை குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவின் ஆலோசனை கூட்டம் விதான் சவுதாவில் நேற்று நடந்தது. துணை குழுவில் இடம்பெற்றுள்ள சமூகநல அமைச்சர் மஹாதேவப்பா, கொரோனா தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் டாக்டர் ரவி, சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
பரிசோதனை
இந்த கூட்டம் முடிந்ததும், அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அளித்த பேட்டி:
மாநிலத்தில் புதிய வகை, கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பரிசோதனைகளை அதிகரிக்க, சுகாதாரத் துறையினருக்கு உத்தரவிட்டு உள்ளேன். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையும் வரை, தினமும் அதிக பரிசோதனைகள் நடத்தப்படும்.
பரிசோதனைகளை குறைத்து, கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது என்று சொல்லும் வேலையை, எங்கள் அரசு செய்வது இல்லை. அதிக பரிசோதனைகள் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிகிச்சை அளிப்பது முக்கியம்.
தற்போது கொரோனாவால் பாதித்தவர்கள், ஐ.சி.யு.,வில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு, வைரஸ் தீவிரம் அதிகமாக இருந்தால், அவர்களையும் உன்னிப்பாக கவனிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில், 26 பேர் இறந்தனர். அவர்களின் இறப்பு அறிக்கையை, கொரோனா தொழில்நுட்ப ஆலோசனை குழு சரிபார்த்தது. இதில் இருவர் மட்டுமே, கொரோனாவுக்கு இறந்தது தெரிந்து உள்ளது.
மற்றவர்கள் வேறு நோய்கள் மூலம் இறந்தது உறுதியானது. இதனால் மக்கள் பதற்றப்பட தேவை இல்லை. கொரோனாவை கட்டுப்படுத்த, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கூறினார்.