மாண்டியா அமைதியை கெடுக்க பா.ஜ., - ம.ஜ.த., சூழ்ச்சி
மாண்டியா அமைதியை கெடுக்க பா.ஜ., - ம.ஜ.த., சூழ்ச்சி
மாண்டியா அமைதியை கெடுக்க பா.ஜ., - ம.ஜ.த., சூழ்ச்சி
ADDED : ஜன 31, 2024 05:20 AM

மாண்டியா : ''மாண்டியாவின் அமைதியை கெடுக்க, பா.ஜ.,வினர் முயற்சி செய்கின்றனர். அரசியல் லாபத்திற்காக அவர்களுடன் சேர்ந்து மாண்டியா மக்களின் நிம்மதியை ம.ஜ.த.,வின் குமாரசாமி கெடுத்து உள்ளார்,'' என, அமைச்சர் செலுவராயசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
மாண்டியா கெரகோடு கிராமத்தில், ஹனுமன் உருவம் பொறித்த கொடியை அகற்றிய விவகாரம், விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த பிரச்னை குறித்து கர்நாடகா விவசாய அமைச்சரும், மாண்டியா மாவட்ட பொறுப்பு அமைச்சருமான செலுவராயசாமி, மாண்டியாவில் நேற்று அளித்த பேட்டி:
கெரகோடு கிராம பஞ்சாயத்துக்கு சொந்தமான நிலத்தில், கொடி கம்பம் நட்டு அதில் தேசியக் கொடி, கன்னட கொடி ஏற்ற வேண்டும் என்று, கிராம பஞ்சாயத்திடம் அனுமதி கேட்டுள்ளனர். அனுமதி கொடுக்கப்பட்டது.
கிராம பஞ்சாயத்தின் நிபந்தனைகளுக்கு, கொடியேற்ற அனுமதி கேட்டவர்கள் சம்மதம் தெரிவித்து உள்ளனர். ஆனால் 25ம் தேதி தேசிய, கன்னட கொடிகளை ஏற்றாமல், ஹனுமன் உருவம் பொறித்த கொடியை ஏற்றி உள்ளனர். இதுபற்றி அறிந்த தாலுகா பஞ்சாயத்து அதிகாரிகள் அங்கு சென்று, கிராம மக்களிடம் கூறிவிட்டு, ஹனுமன் கொடியை இறக்கிவிட்டு, தேசியக் கொடி ஏற்றினர். அப்போது யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
கடலோர மாவட்டங்கள்
இதுபற்றிய தகவல் கிடைத்ததும், ஹனுமன் கொடி அரசு உத்தரவின் பேரில் இறக்கப்பட்டது என்று, பா.ஜ.,வினர் துாண்டிவிட்டு உள்ளனர். இதனால் தான் அங்கு பிரச்னை நடந்து உள்ளது.
மாண்டியாவின் அமைதியை கெடுக்க, பா.ஜ.,வினர் முயற்சி செய்கின்றனர். மக்களை துாண்டிவிடும் வகையில், எதிர்க்கட்சி தலைவர் அசோக், கார்கலா பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., ரவி பேசினர்.
மக்களை துாண்டிவிட்டு பிரச்னையை கிளப்பி விட, இது கடலோர மாவட்டங்கள் இல்லை. மாண்டியா என்பதை பா.ஜ.,வினர் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆன்மா சாந்தி
மாண்டியா மக்கள் அறிவாளிகள். நேற்று நடந்த போராட்டத்தில், குமாரசாமி காவித்துண்டு அணிந்து கலந்து கொண்டதை, என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ம.ஜ.த.,வை வளர்க்க ஜெயபிரகாஷ் நாராயண், ஜே.எச்.படேல் எவ்வளவோ கஷ்டப்பட்டனர். குமாரசாமி ம.ஜ.த.,வில் இருந்து விலகி, பா.ஜ.,வில் சேர வேண்டும்.
ம.ஜ.த.,வை இன்னொரு திறமையான தலைவர் வழிநடத்துவார். அப்போது தான் ஜெயபிரகாஷ் நாராயண், ஜே.எச்.படேல் ஆன்மா சாந்தி அடையும். மாண்டியா மாவட்ட இளைஞர்களை நான் கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன். பா.ஜ., - ம.ஜ.த., அரசியல் சூழ்ச்சிக்கு பலியாகி விடாதீர்கள். மாண்டியா மக்களின் ஆசிர்வாதத்தால் குமாரசாமி 2 முறை முதல்வர் ஆனார். அதை மறந்துவிட்டு மாண்டியா மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.
இது தான் ஜனநாயகமா?
சமீபத்தில் கூட தேவகவுடாவை நான் சந்தித்தேன். மக்களுக்கு சேவை செய்ய என்னை ஆசிர்வதித்தார்.
அப்படிப்பட்டவரின் மகனாக பிறந்த குமாரசாமி, அரசியல் லாபத்திற்காக பா.ஜ.,வினருடன் இணைந்து, மாண்டியா மக்களின் நிம்மதியை கெடுத்து உள்ளார். அவரிடம் கைகூப்பி கேட்கிறேன். இத்தகைய செயலில் ஈடுபட வேண்டாம்.
தேசியக் கொடி ஏற்றியதில் பா.ஜ., - ம.ஜ.த.,வினருக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை. கெரேகோடு பிரச்னைக்கு எதிர்க்கட்சி தலைவர் அசோக், முன்னாள் முதல்வர் குமாரசாமி, பா.ஜ., ரவி தான் நேரடி காரணம். முதல்வரின் புகைப்படம் இருந்த பேனர் மீது கல்வீசி உள்ளனர். இது தான் பா.ஜ.,வின் தேசிய ஜனநாயகமா?
மாண்டியா மக்கள் மீது ம.ஜ.த., - பா.ஜ.,வினருக்கு அக்கறை இல்லை. அப்படி இருந்திருந்தால் 10 வழிச்சாலையில் நிறைய பேர் விபத்தில் இறந்தபோது, இறந்தவர்களின் குடும்பத்தின் பக்கம் நிற்காதது ஏன்?
குமாரசாமி, பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்தபோது, மாண்டியாவில் சர்க்கரை ஆலை துவங்கப்பட்டதா? மாண்டியா மக்கள் எல்லாவற்றையும் கவனிக்கின்றனர்.
நீங்கள் தவறு செய்ததால், ஆட்சியில் இருந்து துாக்கி எறிந்தனர். நாங்கள் தவறு செய்தாலும் அதே நிலை தான்.
கட்சிகளுக்கு இடையில் பிரச்னை இருக்கலாம். ஆனால் நாடு என்று வந்து விட்டால், அனைவரும் ஒன்றாக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.