மெட்கால்ப் ஹவுஸ் சந்திப்பு மேம்பாலம் திட்டம் முடக்கம்
மெட்கால்ப் ஹவுஸ் சந்திப்பு மேம்பாலம் திட்டம் முடக்கம்
மெட்கால்ப் ஹவுஸ் சந்திப்பு மேம்பாலம் திட்டம் முடக்கம்
ADDED : மே 21, 2025 09:37 PM
புதுடில்லி:வடக்கு டில்லியில் மெட்கால்ப் ஹவுஸ் சந்திப்பில் மேம்பாலம் கட்ட பொதுப்பணித்துறை திட்டமிட்டு இருந்த நிலையில், அதே இடத்தில் நமோ பாரத் விரைவு ரயில் பாதை அமைய இருப்பதால், பாலம் கட்டும் திட்டம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா, வெளிவட்டச் சாலை மற்றும் ஹெட்கேவர் சாலை இணையும் இடத்தில் மெட்கால்ப் ஹவுஸ் சந்திப்பில் ஏற்பட்டுள்ள நெரிசலைக் குறைக்க, சிவில் லைன்ஸ் ட்ராமா சென்டர் மற்றும் டி.ஆர்.டி.ஓ., அலுவலகம் இடையே ஆறு வழிச்சாலை மேம்பாலம் கட்டப்படும் என்று கடந்த மாதம் அறிவித்தார்.
ஆனால், சாராய் காலே கான் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் மற்றும் ஹரியானாவின் கர்னால் இடையே ஆர்.ஆர்.டி.எஸ்., நமோ பாரத் விரைவு ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அந்த ரயில் பாதை, பொதுப்பணித் துறை மேம்பாலம் கட்ட முடிவு செய்துள்ள இடம் வழியாக அமைக்கப்படுகிறது.
எனவே, மேம்பாலம் கட்டும் திட்டம் மறுபரிசீலனை செய்யப்படும். நமோ பாரத் ரயில் பாதை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. எனவே, மெட்கால்ப் ஹவுஸ் சந்திப்பில் மேம்பாலம் கட்டும் திட்டத்தின் சாத்தியக்கூறு குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்படும். சாத்தியம் இருந்தால், இரட்டை அடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேம்பாலம் திட்டம் அறிவிப்பதற்கு முன்பே, நமோ பாரத் விரைவு ரயில் வழித்தடம் திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.