முர்ஷிதாபாத் கலவர அறிக்கையால் மம்தாவுக்கு சிக்கல்!... அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் பதற்றம்
முர்ஷிதாபாத் கலவர அறிக்கையால் மம்தாவுக்கு சிக்கல்!... அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் பதற்றம்
முர்ஷிதாபாத் கலவர அறிக்கையால் மம்தாவுக்கு சிக்கல்!... அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் பதற்றம்

முர்ஷிதாபாதில் நடந்த மதக்கலவரம் தொடர்பாக, மேற்கு வங்க உயர் நீதிமன்றம் அமைத்துள்ள குழுவின் விசாரணை அறிக்கை விபரங்கள் சமீபத்தில் வெளியாயின. இது, ஆளும் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக வரும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என, பரவலாக பேசப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு ஏப்., -- மே மாதங்களில், தமிழகத்துடன் இணைந்து சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. கடந்த, 2011 முதல் தொடர்ந்து மூன்று முறை ஆட்சி அமைத்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ், நான்காவது முறையாக ஆட்சி அமைக்க தீவிரமாக உள்ளது.
பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது, மேற்கு வங்கத்தில் கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டன. அதே நேரத்தில், பா.ஜ., தன் செல்வாக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் தேர்தலில் கடுமையான போட்டியைக் கொடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மத கலவரம்
கொல்கட்டாவில் மருத்துவக் கல்லுாரியில், பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம், மம்தா பானர்ஜி அரசுக்கு கடந்தாண்டில் பெரும் தலைவலியாக இருந்தது. குற்றவாளிகளை தப்பிக்க அரசு உதவியது, ஆதாரங்களை அழிக்க முயன்றது என, பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்தப் பிரச்னையில் இருந்து, மம்தா பானர்ஜி அரசு தப்பிப் பிழைத்துள்ளது. இதுபோல, பல சந்தர்ப்பங்களில் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டபோதும், அவற்றில் இருந்து வெளியே வந்துள்ளது.
இந்த நேரத்தில், வக்ப் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாதில், கடந்த மாதம் மதக்கலவரம் நடந்தது. இதில், ஹிந்துக்கள் கொல்லப்பட்டதுடன், அவர்களது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.
இது, மதச்சார்பின்மை என்று வெளியில் கூறிக் கொண்டாலும், முஸ்லிம்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
விசாரணை கமிஷன்
இந்த விவகாரத்தில் மேற்கு வங்க உயர் நீதிமன்றம் தனியாக விசாரணை கமிஷனை அமைத்தது. மேலும், மாநில அரசின் செயல்பாடுகளுக்கும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
உயர் நீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழு, சமீபத்தில் தன் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், கொடூரமான முறையில் ஹிந்துக்கள் தாக்கப்பட்டதாகவும், அதைத் தடுக்க போலீஸ் முன்வரவில்லை என்றும், ஹிந்துக்கள் வீடுகளுக்கு வைக்கப்பட்ட தீயை அணைக்க விடாதபடி, குழாய்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுஉள்ளது.
இதைத்தவிர, திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த வன்முறையை துாண்டிவிட்டு, ஆதரவாக இருந்ததாகவும் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இத்தனை ஆண்டுகளாக பல பிரச்னைகளில் இருந்து தப்பியுள்ள திரிணமுல் காங்கிரசுக்கு, இந்த விசாரணை அறிக்கை நிச்சயம் பேரிடியை ஏற்படுத்தும் என, கூறப்படுகிறது.
குறிப்பாக அடுத்தாண்டில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அரசியல் ரீதியிலும், மக்களின் மன ரீதியிலும், இந்த அறிக்கை தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என, நிபுணர்கள் கூறுகின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -