சட்டத்திற்கு உட்பட்டு கவர்னருக்கு எதிராக கருத்து கூறலாம்: மம்தாவுக்கு ஐகோர்ட் அனுமதி
சட்டத்திற்கு உட்பட்டு கவர்னருக்கு எதிராக கருத்து கூறலாம்: மம்தாவுக்கு ஐகோர்ட் அனுமதி
சட்டத்திற்கு உட்பட்டு கவர்னருக்கு எதிராக கருத்து கூறலாம்: மம்தாவுக்கு ஐகோர்ட் அனுமதி
ADDED : ஜூலை 27, 2024 05:15 PM

கோல்கட்டா: மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் குறித்து ஆதாரமற்ற மற்றும் அவதூறு கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்த கோல்கட்டா உயர்நீதிமன்ற அமர்வு பேச்சு சுதந்திரத்திற்கு உட்பட்டு கருத்துக் கூறலாம் என உத்தரவிட்டு உள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணமுல் காங்.,எம்.எல்.ஏ.,க்கள் சயந்திகா பானர்ஜி, ராயத் ஹூசைன் சர்கார் மற்றும் அக்கட்சி நிர்வாகி குணால் கோஷ் ஆகியோர், தன் மீது அவதூறு பரப்புவதாக அம்மாநில கவர்னர் ஆனந்த போஸ் கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை, கடந்த 16ம் தேதி விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண ராவ், ‛‛ ஆக.,14 வரை கவர்னர் ஆனந்தபோஸ் குறித்து அவதூறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவிக்க மம்தா உள்ளிட்ட 4 பேருக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது'' என உத்தரவிட்டார். இந்த உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரி மம்தா பானர்ஜி மற்றும் குணாஷ் கோஷ் ஆகியோர் கோல்கட்டா உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தனர்.
இதனை விசாரித்த நீதிபதிகள் பிஸ்வரூப் சவுத்ரி மற்றும் ஐபி முகர்ஜி ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவு: பொது வாழ்க்கைக்கான கடமை மற்றும் பேச்சு சுதந்திரம் ஆகியவற்றை மீறாமல் கவர்னர் ஆனந்த போஸ் குறித்து கருத்து தெரிவிக்கலாம். இல்லையென்றால், மேல்முறையீடு செய்தவர்கள் பாதிப்பு மற்றும் பழிவாங்கல் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும். இவ்வாறு அந்த உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனர்.