டில்லியில் நிராகரிக்கப்பட்ட தலைவர்கள் பஞ்சாபை ஆள்கின்றனர்:முதல்வர் ரேகா
டில்லியில் நிராகரிக்கப்பட்ட தலைவர்கள் பஞ்சாபை ஆள்கின்றனர்:முதல்வர் ரேகா
டில்லியில் நிராகரிக்கப்பட்ட தலைவர்கள் பஞ்சாபை ஆள்கின்றனர்:முதல்வர் ரேகா
ADDED : ஜூன் 15, 2025 09:31 PM

சண்டிகர்:“பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வெறும் முகமூடி. டில்லி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆம் ஆத்மி தலைவர்களால் பஞ்சாபில் ஆட்சி நடத்தப்படுகிறது,”என, டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வரும், 19ம் தேதி நடக்கிறது. இங்கு போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் ஜீவன் குப்தாவை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த டில்லி முதல்வர் ரேகா குப்தா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
பஞ்சாபில் போதைப் பொருட்கள் புழக்கம் சகஜமாக இருக்கிறது. ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி மற்றும் பஞ்சாப் மக்களுக்கு மிகப்பெரிய வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் இப்போது, அவை அம்பலமாகி விட்டன. கெஜ்ரிவாலின் பொய் வாக்குறுதிகளை நம்பாத டில்லி மக்கள் அவரை நிராகரித்து விட்டனர். டில்லியில் இருந்து ஓடிவந்து பஞ்சாபில் உட்கார்ந்து இருக்கிறார்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது என கெஜ்ரிவால் பதிலளிக்க வேண்டும். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வெறும் முகமூடி. டில்லி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆம் ஆத்மி தலைவர்கள்தான் பஞ்சாபில் ஆட்சி நடத்துகின்றனர்.
சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் பள்ளிகளை மேம்படுத்துவதாக கூறியவர்கள் என்ன செய்திருக்கின்றனர் என்பதை பஞ்சாப் மக்களுக்கு விளக்க வேண்டும்.
பஞ்சாபில் போதைப்பொருளை ஒழிப்பதாக சட்டசபை தேர்தலின் போது ஆம் ஆத்மி அளித்த வாக்குறுதி என்ன ஆனது? கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரை இழந்துள்ளனர். ரியஸ் எஸ்டேட் மாபியாக்களுடன் கூட்டு சேர்ந்து, ஏழை விவசாயிகளின் நிலத்தை அபகரிக்கின்றனர்.
டில்லியில், 10 ஆண்டுகளாக நடந்த ஆம் ஆத்மி ஆட்சியின் அமைச்சரவையில் ஒரு சீக்கியர் கூட இடம்பெறவில்லை. அது ஏன் என்பதை கெஜ்ரிவால் விளக்குவாரா?
கடந்த, 1984ம் ஆண்டு நடந்த சீக்கிய எதிர்ப்பு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் செயல்முறை பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் துவங்கியது என்று குப்தா கூறினார்.
அந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பதினருக்கு டில்லியில் பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பிறகுதான் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. டில்லி பா.ஜ., அமைச்சரவையில் சீக்கியர், பஞ்சாபி சமூக அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். முதல்வராக இருந்தாலும் பகவந்த் மான் அதிகாரமற்றவராக ஆம் ஆத்மி தலைவர்களால் மாற்றப்பட்டுள்ளார்.
அரசு விளம்பரங்களில் மட்டுமே அவர் முதல்வர். பஞ்சாப் அரசின் முழு நிர்வாகத்தையும் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், பிபவ் குமார், ராகவ் சத்தா ஆகியோர்தான் கவனிக்கின்றனர். இதில் யார் பஞ்சாப் வம்சாவளி? இதில் யாருக்கு பஞ்சாப் மக்களின் பிரச்னைகள் குறித்து தெரியும்? ஆம் ஆத்மி தலைவர்கள் அதிகார வெறி கொண்டவர்கள். டில்லியில் அதிகாரத்தை இழந்தவுடன் பஞ்சாபில் தஞ்சம் அடைந்து விட்டனர்.
கடந்த, 2022ம் நடந்த சட்டசபைத் தேர்தலின் போது பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்தது. அதுபற்றி இப்போது பேசுவதே இல்லை. ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன. பெண்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. இதற்கு கெஜ்ரிவால் பதிலளிக்க வேண்டும்.
லூதியானா மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி., சஞ்சீவ் அரோரா போட்டியிடுகிறார். அரோரா வெற்றி பெற்று விட்டால், காலியாகும் ராஜ்யசபா எம்.பி., பதவியை அடைந்து பார்லி.,க்குள் நுழைய கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.