லோக்சபா தேர்தலில் 'சீட்' பெற பா.ஜ.,வில் குடுமிப்பிடி!: மத்திய அமைச்சர் மீண்டும் போட்டியிட எதிர்ப்பு
லோக்சபா தேர்தலில் 'சீட்' பெற பா.ஜ.,வில் குடுமிப்பிடி!: மத்திய அமைச்சர் மீண்டும் போட்டியிட எதிர்ப்பு
லோக்சபா தேர்தலில் 'சீட்' பெற பா.ஜ.,வில் குடுமிப்பிடி!: மத்திய அமைச்சர் மீண்டும் போட்டியிட எதிர்ப்பு
ADDED : ஜன 10, 2024 10:54 PM

பெங்களூரு: லோக்சபா தேர்தலில் 'சீட்' பெற, பா.ஜ.,வில் குடுமிப்பிடி சண்டை துவங்கியுள்ளது. பீதர் தொகுதியில், மத்திய அமைச்சர் பகவந்த் கூபா போட்டியிட, சொந்த கட்சி எம்.எல்.ஏ.,க்களே, எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா முன்பே, மத்திய அமைச்சரும், எம்.எல்.ஏ.,க்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகாவின் வடமாவட்டமான பீதர் தொகுதியில் இருந்து, 2014, 2019 லோக்சபா தேர்தல்களில், வெற்றி பெற்று எம்.பி., ஆனவர் பகவந்த் கூபா, 56. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சராக உள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலில், மீண்டும் பீதர் தொகுதியில் போட்டியிட அவர் விரும்புகிறார். இதற்கான ஏற்பாடுகளையும் அவர் செய்து வருகிறார். ஆனால், 'பகவந்த் கூபாவுக்கு மீண்டும் சீட் தர கூடாது' என, பீதர் அவுராத் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரபு சவுஹான், பசவகல்யாண் பா.ஜ., - எம்.எல்.ஏ., சரணு சலகர் ஆகியோர், சில மாதங்களுக்கு முன்பு, வெளிப்படையாகவே கூறினர்.
சுட்டுக்கொல்ல சதி
சட்டசபை தேர்தலில் தன்னை தோற்கடிக்க, காங்கிரஸ் கட்சியினருடன் இணைந்து செயல்பட்டார் என்றும், கூலிப்படை ஏவி தன்னை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல சதி திட்டம் தீட்டினார் எனவும், பகவந்த் கூபா மீது, பிரபு சவுஹான் 'பகீர்' குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்நிலையில், லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய, எம்.எல்.ஏ.,க்களிடம் கருத்து கேட்க, பெங்களூரு நட்சத்திர ஹோட்டலில் பா.ஜ., நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தியது. மாநில தலைவர் விஜயேந்திரா தலைமையில் நடந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர் பகவந்த் கூபாவும் பங்கேற்றார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் பிரபு சவுஹான், சரணு சலகர் ஆகியோர் பேசுகையில், 'வரும் லோக்சபா தேர்தலில் எக்காரணம் கொண்டும், பீதர் தொகுதி சீட்டை, பகவந்த் கூபாவுக்கு கொடுக்கக்கூடாது' என்று கூறினர்.
ஆணவம், அகங்காரம்
இதைக் கேட்டு கோபம் அடைந்த பகவந்த் கூபா, ''எனக்கு சீட் கொடுக்கக்கூடாது என்று சொல்ல, நீங்கள் யார்? நான் தேர்தலில் போட்டியிட வேண்டுமா, வேண்டாமா என்று, கட்சியின் தலைவர்கள் முடிவு செய்வர்.
''இங்கு நடப்பது கருத்து கேட்புக் கூட்டம் மட்டுமே. என்னை பற்றி நீங்கள் பேசுவதை கேட்டு, நான் அமைதியாக இருக்க வேண்டுமா?,'' என்று கோபமாக பேசினார்.
இதனால் கோபம் அடைந்த பிரபு சவுஹான், சரணு சலகர் ஆகியோர் மேடை முன் வந்தனர். பிரபு சவுஹானை பார்த்து, இருவரும் கூறியதாவது:
சட்டசபை தேர்தலில் எங்களுக்கு எதிராக பிரசாரம் செய்தீர்கள். காங்கிரஸ்காரர்களுடன் சேர்ந்து, நீங்கள் என்ன செய்தீர்கள் என்று தெரியும். ஆனால் தொகுதி மக்கள், உண்மையான தொண்டர்கள் எங்களை கைவிடவில்லை.
கட்சி விரோத செயலில் ஈடுபடும், உங்களுக்கு ஆதரவாக, நாங்கள் பிரசாரம் செய்ய வேண்டுமா? தொண்டர்களை நீங்கள் மதிப்பதே இல்லை. உங்கள் வீட்டுக்கு வருபவர்களுக்கு, மரியாதை கொடுப்பது இல்லை. ஆணவம், அகங்காரத்தில் பேசுகிறீர்கள். முதலில் நீங்கள் கட்சியின் தொண்டர் என்பதை மறந்து விடாதீர்கள்.
இவ்வாறு ஆவேசமாக கூறினர்.
இணைந்து பணியாற்றுங்கள்
மீண்டும் பேசிய பகவந்த் கூபா, ''2019 லோக்சபா தேர்தலில், என்னை தோற்கடிக்க நீங்கள் இருவரும், என்ன செய்தீர்கள் என்று, எனக்கு தெரியும்,'' என்றார். எம்.எல்.ஏ.,க்களும், மத்திய அமைச்சரும் மாறி, மாறி ஒருவர் மீது, ஒருவர் குற்றச்சாட்டினர். இறுதியில், பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலையிட்டு சமாதானம் செய்தார்.
''இங்கு நடப்பது கருத்து கேட்புக் கூட்டம் தான். வேட்பாளர்களை தேர்வு செய்யவில்லை. யார் வேட்பாளர் என்று, கட்சியின் மத்திய தேர்தல் குழு தான் முடிவு செய்யும். வேட்பாளர் யார் என்று பார்ப்பதை விட, கட்சியின் நலனுக்காக, அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுங்கள்,'' என்றார்.
பீதர் தொகுதியில் மட்டும் இல்லை, சிக்கமகளூரு தொகுதியிலும், பா.ஜ., சீட்டுக்கு குடுமிப்பிடி சண்டை ஏற்பட்டு உள்ளது. இந்த தொகுதியின் எம்.பி.,யாக மத்திய விவசாய இணை அமைச்சர் ஷோபா உள்ளார்.
இவருக்கு பதிலாக தனக்கு சீட் தர வேண்டுமென, காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த, பிரமோத் மத்வராஜ், கட்சி மேலிடத்திடம் கேட்டு வருகிறார்.