கோல்கட்டா போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை! கவர்னர் புகாரால் மத்திய அரசு உத்தரவு
கோல்கட்டா போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை! கவர்னர் புகாரால் மத்திய அரசு உத்தரவு
கோல்கட்டா போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை! கவர்னர் புகாரால் மத்திய அரசு உத்தரவு
ADDED : ஜூலை 08, 2024 01:40 AM

புதுடில்லி: மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீதான அவதுாறு குற்றச்சாட்டுகளை ஊக்குவித்தது மற்றும் பரப்பியதற்காக, கோல்கட்டா போலீஸ் கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் மீது, மத்திய உள்துறை அமைச்சகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில கவர்னராக ஆனந்த போஸ் உள்ளார். இவருக்கும், முதல்வர் மம்தாவுக்கும் பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு உள்ளது.
இந்நிலையில், கவர்னர் மாளிகையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றிய பெண், கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார்.
குற்றச்சாட்டு
இது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என கவர்னர் தரப்பு தெரிவித்தது. இது தொடர்பாக விசாரிக்க போலீசுக்கு முதல்வர் மம்தா உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து மாநில அரசு - கவர்னர் இடையிலான மோதல் வலுத்தது.
இதற்கிடையே லோக்சபா தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு பின் மேற்கு வங்கத்தில் பல வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேச, கவர்னர் நேரம் ஒதுக்கினார்.
பா.ஜ., மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, பாதிக்கப்பட்டவர்களை கவர்னர் மாளிகைக்கு அழைத்து வந்தார். ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.
இது மேலும் அனலை கிளப்பியது. கவர்னர் மாளிகைக்குள் போலீசை அனுமதிக்க ஆனந்த போஸ் மறுத்தார்.
இந்நிலையில், கவர்னர் மாளிகைக்குள் பெண்கள் வர அச்சப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்தில் பேசினார். இதை தொடர்ந்து, கவர்னர் ஆனந்த போஸ் தரப்பு, முதல்வர் மீது அவதுாறு வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் வரும் 10ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
அனுமதி
இதற்கிடையே, டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த கவர்னர் ஆனந்த போஸ், அவரிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.
அதில், தேர்தல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க, தான் அனுமதி அளித்தும், கோல்கட்டா போலீசார் அவர்களை கவர்னர் மாளிகைக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர் என்பதை குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், தன் மீது பாலியல் பொய் புகார் கூறிய பெண்ணின் குற்றச்சாட்டை கவர்னர் மாளிகை பணியில் இருக்கும் போலீசார் ஊக்குவிப்பதாகவும், பரப்புவதாகவும் கவர்னர் தெரிவித்து இருந்தார்.
போலீசாரின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு கோல்கட்டா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல், துணை கமிஷனர் இந்திரா முகர்ஜி ஆகியோர் தான் காரணம் என்றும் அதில் தெரிவித்து இருந்தார்.
அவர்கள் அரசு ஊழியர்கள் என்பதையே மறந்து ஒருசார்புடன் பணியாற்றுவதாகவும், விதிகளை மீறுவதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்த அறிக்கையின் நகல், மாநில அரசுக்கும் அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து, கமிஷனர் வீனித் கோயல், துணை கமிஷனர் இந்திரா ஆகியோர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது.