ஜம்முவில் கோவில் சிலைகளை சேதப்படுத்தி தீ வைத்தவர் கைது
ஜம்முவில் கோவில் சிலைகளை சேதப்படுத்தி தீ வைத்தவர் கைது
ஜம்முவில் கோவில் சிலைகளை சேதப்படுத்தி தீ வைத்தவர் கைது
ADDED : ஜூலை 08, 2024 01:37 AM
ஜம்மு, : ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஜம்மு புறநகர் பகுதியில் நகோரோடா அருகே உள்ளது நரேன் கூ கிராமம். இங்குள்ள கோவிலில் சாமி சிலைகளை மர்மநபர்கள் சிலர் சேதப்படுத்தினர்.
அங்கிருந்த தரை விரிப்புகளுக்கும் தீ வைத்து விட்டு அந்த கும்பல் தப்பி சென்றது. சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே அதே பகுதியை சேர்ந்த அருண் சர்மா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
கோவிலில் சிலை சேதப்படுத்தப்பட்டதை அறிந்து சம்பவ இடத்துக்கு மோப்ப நாயுடன் கைரேகை நிபுணர்கள் விரைந்து சென்று சோதனையிட்டனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவு அடிப்படையில், நான்கு பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தோம்.
அதில் அருண் சர்மா, சிலைகளை சேதப்படுத்தியதை ஒப்புக்கொண்டதை அடுத்து அவரை கைது செய்தோம். அவரிடம் நடத்திய விசாரணையில் கோவிலில் சிலர் சூனியம் செய்வதை கண்டித்து, சாமி சிலைகளை சேதப்படுத்தியதாகவும், கிராம தலைவருடன் இருந்த முன்விரோதம் காரணமாக இந்த செயலில் ஈடுபட்டதாகவும் அருண் சர்மா தெரிவித்தார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.