கோலார் கோஷ்டிப்பூசலை தவிடு பொடியாக்க காங்., திட்டம்
கோலார் கோஷ்டிப்பூசலை தவிடு பொடியாக்க காங்., திட்டம்
கோலார் கோஷ்டிப்பூசலை தவிடு பொடியாக்க காங்., திட்டம்
ADDED : பிப் 05, 2024 11:16 PM

கோலார் லோக்சபா தொகுதியில் 2019ல் நடந்த தேர்தலில், உட்கட்சிப் பூசலால் காங்கிரஸ் வேட்பாளர் கே.ஹெச்.முனியப்பா தோல்வி அடைந்தார்.
பா.ஜ., தோற்கடிக்கவில்லை; கட்சியினரே தோற்கடித்ததாக, மேலிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் முறையிட்டார்.
இதை தொடர்ந்து 2023 சட்டசபைத் தேர்தலில், தேவனஹள்ளி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு முனியப்பா வென்றார். உணவு அமைச்சராக உள்ளார்.
கருத்துக்கணிப்பு
சட்டசபைத் தேர்தலின்போது மாநிலம் முழுதும் உள்ள 224 சட்டசபை தொகுதிகளில் காங்கிரசுக்காக ஆய்வு செய்த சுனில் கனகோலு கருத்தாய்வு குழுவிடமே லோக்சபாவின் 28 தொகுதிகளின் நிலவரம் குறித்து ஆய்வு செய்யும் பொறுப்பை, காங்கிரஸ் ஒப்படைத்து உள்ளது.
முதற்கட்ட கருத்தாய்வு 2023 நவம்பரில் முடிந்தது. இரண்டாம் கட்ட கருத்தாய்வு 2024 ஜனவரியில் துவங்கியது. கோலார் தாலுகாவில் வக்கலேரி, நரசாபுரா , வேம்கல், கேலனூர், ஆகிய இடங்களில் கருத்துக்கணிப்பு நடந்தது.
கோலார் லோக்சபா 'தனி' தொகுதியாகும். இங்கு எஸ்.சி., வகுப்பில் இடது, வலது என, இரு பிரிவுகள் உள்ளன. அதிகபட்சமாக வலது பிரிவினர் தான் உள்ளனர்.
ஆயினும், காங்கிரசில் இடது பிரிவை சேர்ந்த முனியப்பாவுக்கு மட்டுமே சீட் வழங்கப்பட்டது. எனவே, இம்முறை வலது பிரிவுக்கு தான் சீட் வழங்க வேண்டும் என பல கிராமங்களில் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், கடந்த இரண்டாம் தேதி அன்று மாலை, முதல்வரின் அரசியல் செயலரான நசீர் அகமது அலுவலகத்தில், அவரின் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. எஸ்.சி., வலது பிரிவை சேர்ந்தவருக்கு சீட் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
எஸ்.சி., வலது பிரிவு
இதற்கு கோலார் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத், பங்கார்பேட்டை எம்.எல்.ஏ., நாராயணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., சீனிவாச கவுடா ஆதரவு தெரிவித்தனர்.
சிந்தாமணி எம்.எல்.ஏ., அமைச்சர் சுதாகர், மாலுார் எம்.எல்.ஏ., நஞ்சேகவுடா, அனில் குமார் எம்.எல்.சி., அனில் குமார் ஆகியோர் மேலிட உத்தரவை ஏற்பதாக தெரிவித்துள்ளனர்.
இவ்விஷயத்தில், முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் மவுனமாக இருந்து வருகிறார்.
'நான் சட்டசபைத் தேர்தலில் தோற்றவன். யார் எம்.எல்.ஏ.,வோ, அவர்கள் கருத்துக்கு தான் சக்தி அதிகம்; அவர்களை கேளுங்கள்' என அடக்கி வாசிக்கிறார்.
சீட் கேட்போர் பட்டியலில் அமைச்சர் கே.ஹெச்.முனியப்பா மட்டுமின்றி, புதியவர்களான கட்சி பிரமுகர் சி.எம்.முனியப்பா, முத்தே கங்காதர், மதன் பாட்டீல் ஆகியோர் பெயரும் உள்ளது.
மேலிட ஆதரவு
கோலார் தொகுதியை பா.ஜ.,விடமிருந்து கைப்பற்ற மாநில அமைச்சராக உள்ள கே.ஹெச்.முனியப்பா தான் ஏற்றவர் என்பதை சோனியா, ராகுல் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளதாகவும், அவரே வேட்பாளர் ஆவார் எனவும் மாவட்ட காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக கே.ஹெச்.முனியப்பாவுக்கு எதிர்ப்பாக உள்ள முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமாருக்கு, எம்.எல்.சி., பதவியை அளித்து, அவரை அமைச்சர் ஆக்கும் ஆலோசனையும் நடந்து வருகிறது
- நமது நிருபர் -.