ஜனநாயகத்தை கொலை செய்வதா? சண்டிகர் தேர்தல் அதிகாரிக்கு கண்டனம்!
ஜனநாயகத்தை கொலை செய்வதா? சண்டிகர் தேர்தல் அதிகாரிக்கு கண்டனம்!
ஜனநாயகத்தை கொலை செய்வதா? சண்டிகர் தேர்தல் அதிகாரிக்கு கண்டனம்!
ADDED : பிப் 06, 2024 03:38 AM

புதுடில்லி: சண்டிகர் மேயர் தேர்தலை நடத்திய தேர்தல் அதிகாரியின் நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
'தேர்தல் அதிகாரியின் நடவடிக்கை ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் உள்ளது; அவர் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்' என, கடுமையுடன் குறிப்பிட்டது.
பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பொது தலைநகரான சண்டிகரில் சமீபத்தில் மாநகராட்சி மேயர் தேர்தல் நடந்தது. இதில், இண்டியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்., கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
இந்தக் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருந்த நிலையில், பா.ஜ., வென்றதாக அறிவிக்கப்பட்டது.
தேர்தலில் ஓட்டளித்த, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரசின் எட்டு கவுன்சிலர்களின் ஓட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, மேயர் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மியின் குல்தீப் குமார், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், இடைக்கால உத்தரவு அளிக்க உயர் நீதிமன்றம் மறுத்தது.
இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.
மேயர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தொடர்பான வீடியோக்களை பார்த்த அமர்வு கூறியுள்ளதாவது:
இதை பார்க்கும்போது, தேர்தல் அதிகாரி, ஓட்டுச் சீட்டுகளில் கிறுக்கியது தெளிவாக தெரிகிறது. இப்படியா தேர்தலை நடத்துவது. இது ஜனநாயகத்தை கொலை செய்வதாக உள்ளது. இந்த அதிகாரி தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.
கேமராக்களை பார்த்தவுடன், ஏதோ தலைமறைவு குற்றவாளி போல், அந்த அதிகாரி ஓடியது ஏன். உச்ச நீதிமன்றம் கவனிக்கிறது என்று அவரிடம் கூறுங்கள். வரும், 19ம் தேதி அந்த அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.
வரும், 7ம் தேதி திட்டமிட்டிருந்த மாநகராட்சி கூட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்கள், ஆதாரங்கள் உடனடியாக, பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவுகளை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யத் தவறிவிட்டது.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.