செடிகளை குழந்தைகள் போல் பராமரிக்கும் கதக் விவசாயி
செடிகளை குழந்தைகள் போல் பராமரிக்கும் கதக் விவசாயி
செடிகளை குழந்தைகள் போல் பராமரிக்கும் கதக் விவசாயி
ADDED : ஜன 27, 2024 11:06 PM

கதக்: ''செடிகளை குழந்தைகள் போல் பராமரித்து கொண்டால் தான், ஆபத்தான நேரத்தில் நமக்கு உதவும்,'' என கதக்கின் முதிய விவசாயி லிங்கராஜ் ஹொஸ்மணி தெரிவித்தார்.
கர்நாடகாவில் ஆண்டுதோறும் ஜூன் மாத இறுதியில் துவங்கி, ஆகஸ்ட் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும்.
ஆனால் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யவில்லை. இதனால் நீர்நிலைகள் வேகமாக வற்றி வருவதால், விவசாய பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.
பல மாவட்டங்களில் பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி உள்ளன. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், சிரமம் அனுபவித்து வருகின்றனர். ஆனால் வறட்சிக்கு மத்தியிலும், விவசாயி ஒருவர் லாபம் பார்த்து வருகிறார்.
கதக்கின் லட்சுமேஸ்வர் கோஜனுார் கிராமத்தில் வசிப்பவர் லிங்கராஜ் ஹொஸ்மணி, 62. கடந்த 30 ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபடுகிறார்.
தன்னுடைய 22 ஏக்கர் நிலத்தில் சப்போட்டா, தென்னை, எலுமிச்சை, வாழை, பப்பாளி, மா உள்ளிட்டவற்றை பயிரிடுகிறார். இதன் மூலம் நல்ல லாபம் பார்த்து வருகிறார்.
விவசாயத்திற்கு தேவை தண்ணீர். அதை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். நான் விவசாயம் செய்ய ஆரம்பித்ததில் இருந்து, தண்ணீரை சிக்கனமாக செலவழிப்பதில், அதிக கவனம் செலுத்துகிறேன்.
சேமித்து வைத்த தண்ணீரை, எனது தோட்டத்தில் கட்டப்பட்டு உள்ள பெரிய சிமென்ட் தொட்டிகளில், குழாய்கள் மூலம் நிரப்புகிறேன். பின்னர் சொட்டுநீர் பாசன முறையில், செடிகளுக்கு தண்ணீர் விடுகிறேன்.
செயற்கை உரங்களை செடிகளுக்கு பயன்படுத்துவது இல்லை. இயற்கையான உரங்களை பயன்படுத்துகிறேன். செடிகளை குழந்தைகள் போல் பராமரித்து கொண்டால் தான், ஆபத்தான நேரத்தில் நமக்கு உதவும். தோட்டத்தை சுத்தமாக வைக்கவும், பராமரிக்கவும் நாகப்பா என்பவரை, 20 ஆண்டுகளாக என்னிடம் வேலைக்கு வைத்து உள்ளேன்.
திட்டமிட்டு விவசாயம் செய்தால், வறட்சி காலமாக இருந்தால், விவசாயத்தில் லாபம் பார்க்கலாம் என்கிறார், லிங்கராஜ் ஹொஸ்மணி.