கோவில் வருமானத்தில் கர்நாடகா 'கை' வைக்கும் மசோதா தோல்வி
கோவில் வருமானத்தில் கர்நாடகா 'கை' வைக்கும் மசோதா தோல்வி
கோவில் வருமானத்தில் கர்நாடகா 'கை' வைக்கும் மசோதா தோல்வி
ADDED : பிப் 24, 2024 11:47 PM
பெங்களூரு: கர்நாடக சட்டசபையில், 'கர்நாடக ஹிந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024' சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, 1 கோடி ரூபாய்க்கு மேலான வருமானம் உள்ள கோவில்களிடம் இருந்து, 10 சதவீத தொகையும், 10 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை வருமானம் உள்ள கோவில்களில் இருந்து, 5 சதவீத தொகையும் வசூலிக்கப்படும் என்று, அறிவிக்கப்பட்டது.
முதல்வர் சித்தராமையா தலைமையிலான, கர்நாடக காங்., அரசின் இந்த முடிவுக்கு, பா.ஜ., மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பொதுமக்கள் மத்தியிலும், கடும் எதிர்ப்பு எழுந்தது.
முதல்வர் பதில்
கர்நாடக மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திர எடியூரப்பா, 'ஹிந்து கோவில் வருமானத்தை கொண்டு, காங்கிரஸ் அரசு தன் கஜானாவை நிரப்ப பார்க்கிறது.
'கடவுளுக்காகவும், கோவில் வளர்ச்சிக்காகவும் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கையை கோவில் மேம்பாட்டுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்படியே கோவில் நிதியை எடுப்பதாக இருந்தால், அனைத்து மத நிறுவனங்களில் இருந்தும் வசூலிக்கலாம். ஹிந்து கோவில்களில் இருந்து மட்டும் வசூலிப்பது ஏன்?' என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, 'ஹிந்து கோவில்களில் இருந்து பெறப்படும் நிதி, ஹிந்து கோவில்களின் மேம்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்' என்றார்.
ஆனாலும், கர்நாடக காங்கிரஸ் அரசின் சட்டத் திருத்தத்திற்கு பக்தர்கள், ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
'கோவில் வருமானத்தில்,10 சதவீதம் வாங்குவது ஏற்புடையதல்ல. கோவில்கள் வியாபார நிறுவனங்கள் அல்ல. கர்நாடகாவில் காங்., ஆட்சிக்கு வந்த பின், மசூதி, சர்ச் பராமரிப்பிற்கு என பல 100 கோடி ரூபாயை, சிறு பான்மையினருக்கு ஒதுக்கியுள்ளது.
'ஆனால், ஹிந்து கோவில்களுக்கு எதுவும் ஒதுக்காமல், அங்கிருந்து பணத்தை எடுப்பது என்ற ஹிந்து விரோத போக்கையே காட்டுகிறது. நல்ல நோக்கத்தை திசை திருப்புகிறது' என்றும் புகார் தெரிவித்தனர்.
மேலவையில் தாக்கல்
இந்தச் சூழ்நிலையில், ஹிந்து சமய அறநிலையத்துக்கு உட்பட்ட கோவில்களின் ஆண்டு வருமானத்தில், அரசுக்கும் பணம் தர வேண்டும் என்ற புதிய சட்ட திருத்த மசோதா, கர்நாடக மாநில சட்ட மேலவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சட்ட திருத்த மசோதாவை, மாநில ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி தாக்கல் செய்தார். இதன் மீது குரல் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.
அப்போது, மசோதாவுக்கு பல உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஆதரவு, எதிர்ப்பு தொடர்பாக, மேலவை தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்த துணை தலைவர் பிராணேஷ் ஓட்டெடுப்பு நடத்தினார்.
மசோதாவுக்கு ஏழு உறுப்பினர்கள் ஆதரவும், 18 பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர். அதனால், மசோதா தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.