Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கர்நாடக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்... வரும் 17 முதல்! மோட்டார் வாகன திருத்த சட்டத்தை எதிர்த்து

கர்நாடக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்... வரும் 17 முதல்! மோட்டார் வாகன திருத்த சட்டத்தை எதிர்த்து

கர்நாடக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்... வரும் 17 முதல்! மோட்டார் வாகன திருத்த சட்டத்தை எதிர்த்து

கர்நாடக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்... வரும் 17 முதல்! மோட்டார் வாகன திருத்த சட்டத்தை எதிர்த்து

ADDED : ஜன 07, 2024 02:40 AM


Google News
பெங்களூரு : மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மோட்டார் வாகன திருத்த சட்டத்தை எதிர்த்து,வரும் 17ம் தேதி முதல், காலவரையின்றி போராட்டம் நடத்தப்போவதாக கர்நாடகா லாரிஉரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால், வர்த்தகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டங்களில், இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றது போல், பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டது.

இந்த புதிய குற்றவியல் சட்டங்களுக்கு, 'பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சுரக் ஷய அதிநியம், பாரதிய நியாய சன்ஹிதா' என ஹிந்தியில் பெயர் சூட்டப்பட்டது.

போராட்டம்

இந்த மூன்று புதிய குற்றவியல் சட்ட திருத்த மசோதாக்களும், பார்லிமென்டின் இரு சபைகளிலும் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஒப்புதல் அளித்தார். இந்த சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன.

இதில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் வாகன விபத்து தொடர்பான சட்ட திருத்தம் இடம் பெற்றுள்ளது. அதில், சாலை விபத்துகளை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடும் ஓட்டுனர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 7 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், மஹாராஷ்டிரா, பீஹார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில், லாரி, கார், தனியார் பஸ் உரிமையாளர்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தினர்.

தாக்குதல்

இதுகுறித்து, கர்நாடகா லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் நவீன்ரெட்டி, பெங்களூரில் நேற்று கூறியதாவது:

ஏதாவது விபத்து நடந்தால், ஓட்டுனர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. பின் சக்கரத்தில் பைக் சிக்கிக் கொண்டால், கனரக வாகனத்தை நிறுத்துவது எளிதானது அல்ல.

ஒரு வேளை லாரியை நிறுத்தினால், அங்கிருக்கும் பொதுமக்கள், ஓட்டுனரை தாக்கி விடுகின்றனர். பாதுகாப்புக்காக, அங்கிருந்து ஓடிச் சென்று, ஓட்டுனர்கள் உள்ளூர் போலீஸ் நிலையத்தை நாடுகின்றனர்.

இத்தகைய சம்பவங்களில், விபத்து ஏற்படுத்திவிட்டு, தப்பி ஓடிவிட்டதாக வழக்கு போடுவது எப்படி சரியாகும்? மத்திய அரசு உடனே புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

6 லட்சம் பேர்

எங்கள் சங்கத்தில், 6 லட்சம் லாரி உரிமையாளர்கள் உள்ளனர். 15 லட்சம் லாரி ஓட்டுனர்கள் உள்ளனர். சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, 17ம் தேதி முதல், மாநிலம் முழுதும் காலவரையின்றி லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

மஹாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களிலும் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடக்கின்றன. இதனால், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. புதிய சட்டத்தால், லாரி ஓட்டுனர்கள் தேவையில்லாத தொந்தரவு அனுபவிக்க வேண்டியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

லாரி உரிமையாளர்கள் போராட்டத்தினால், கர்நாடகாவில் லட்சக்கணக்கான லாரிகள் இயக்கப்படாது என்று தெரிய வந்துள்ளது. இதனால், ஆங்காங்கே சரக்குகள் தேங்கி, வர்த்தகம் முடங்கும் அபாயம் உள்ளது.

சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், லாரி உரிமையாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us