'கருணை கொலைக்கு அனுமதி கொடுங்கள்' ஜனாதிபதிக்கு கர்நாடகா போலீசார் கடிதம்
'கருணை கொலைக்கு அனுமதி கொடுங்கள்' ஜனாதிபதிக்கு கர்நாடகா போலீசார் கடிதம்
'கருணை கொலைக்கு அனுமதி கொடுங்கள்' ஜனாதிபதிக்கு கர்நாடகா போலீசார் கடிதம்
ADDED : பிப் 25, 2024 02:47 AM
பெங்களூரு: 'கடந்த மூன்று ஆண்டுகளாக பணியிட மாற்றம் செய்யப்படாதால், குடும்பத்தில் பிரச்னை வருகிறது. இதனால் எங்களை கருணை கொலை செய்ய அனுமதி கொடுங்கள்' என, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, கர்நாடகா போலீசார் சிலர் கடிதம் எழுதி உள்ளனர்.
உச்சநீதிமன்ற உத்தரவு, கர்நாடகா சிவில் சர்வீஸ் சட்டத்தின் படி, ஒரே போலீஸ் நிலையத்தில், மூன்று ஆண்டுகள் பணியாற்றும் போலீசாரை, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பது நடைமுறை. ஆனால் 2021ல் இருந்து, கர்நாடகாவில் பணியிட மாற்றங்கள் நடக்கவில்லை.
இந்நிலையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசார், ஜனாதிபதி திரவுபதி முர்வுக்கு எழுதிய கடிதம்:
நாங்கள் ஒரு ஊரில் வேலை செய்தால், எங்கள் குடும்பம் இன்னொரு ஊரில் இருக்கிறது. எங்களுக்கும், எங்கள் குடும்பத்திற்கும் இணக்கமான சூழல் இல்லை. வயதான பெற்றோரை கவனிக்க முடியவில்லை. எந்த ஆட்சி இருந்தாலும், முதல்வரும், உள்துறை அமைச்சரும் போலீசாரை, பணி இடமாற்றம் செய்வதாக வாய்மொழி உத்தரவிடுகின்றனர். ஆனால் எழுத்து வடிவில், எந்த உத்தரவும் வருவது இல்லை.
இடமாற்றம் இல்லாததால், குடும்பத்துடன் நேரம் செலவிட முடியவில்லை. குடும்பத்தில் பிரச்னை வருகிறது.
நாங்கள் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதால், மற்றவர்களை போல, போராட்டம் நடத்த அனுமதி இல்லை. எங்கள் மன நிம்மதி போய் விட்டது; நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை. இவ்வளவு கஷ்டத்திற்கு மத்தியில் வாழ்கிறோம். இதனால் எங்களை கருணை கொலை செய்ய, அனுமதிக்க வேண்டும் என்று, கடினமான மனதுடன் கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த கடிதம் முதல்வர் சித்தராமையாவுக்கும், உள்துறை அமைச்சர் பரமேஸ்வருக்கும் அனுப்பி வைத்து உள்ளனர்.