கர்நாடக ' யாத்ரிகர் நிவாஸ் ' அயோத்தியில் கட்ட அனுமதி
கர்நாடக ' யாத்ரிகர் நிவாஸ் ' அயோத்தியில் கட்ட அனுமதி
கர்நாடக ' யாத்ரிகர் நிவாஸ் ' அயோத்தியில் கட்ட அனுமதி
ADDED : ஜன 11, 2024 03:43 AM
பெங்களூரு: அயோத்தி ராமர் கோவிலை தரிசிக்க செல்லும், கர்நாடக பக்தர்களின் வசதிக்காக, கர்நாடக 'யாத்ரிகர் நிவாஸ்' கட்ட, ஹிந்து அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு உத்தரபிரதேச அரசு அனுமதி அளித்துள்ளது.
ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அயோத்தியில் வரும் 22ல், ராமர் கோவில் திறப்பு விழா நடக்கவுள்ளது. கோவில் திறக்கப்பட்ட பின், எதிர்வரும் நாட்களில் கர்நாடகாவில் இருந்து, பல ஆயிரக்கணக்கான ராம பக்தர்கள், அயோத்திக்கு செல்வர். அவர்களுக்கு தங்கவும், உணவு வசதிக்காகவும், விருந்தினர் இல்லம் கட்ட, ஹிந்து அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக உத்தரபிரதேச அரசிடம் அனுமதி கோரப்பட்டது.
சரயு ஆற்றங்கரை அருகில், 5 ஏக்கர் பரப்பளவில் 10 கோடி ரூபாய் செலவில், விருந்தினர் இல்லம் கட்ட அனுமதி கோரி, முதல்வர் சித்தராமையா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்துக்கு, 2023 ஆகஸ்டில் கடிதம் எழுதினார்.
அதற்கு முன் 2020ல், அன்றைய முதல்வர் எடியூரப்பாவும் கூட, இது குறித்து உத்தரபிரதேச முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
கர்நாடக அரசின் வேண்டுகோளுக்கு, உத்தர பிரதேச அரசு பச்சைக்கொடி காண்பித்துள்ளது. அம்மாநில ஹவுசிங் போர்டு, கர்நாடக அரசுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளது. அங்கு இடம் வழங்கிய பின், கர்நாடக அறநிலையத் துறை 10 கோடி ரூபாய் செலவில் கட்டட பணி துவக்கும்.
அடுத்த ஓராண்டில், அயோத்தியில் கர்நாடக யாத்ரிகர்கள் நிவாஸ் செயல்பட வாய்ப்புள்ளது. அதன்பின் பக்தர்கள் தங்கவும், உணவுக்கும் அங்கு வசதிகள் செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.