சங்கராச்சாரியாரையும் விட்டு வைக்காத கங்கனா: ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக கருத்து
சங்கராச்சாரியாரையும் விட்டு வைக்காத கங்கனா: ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக கருத்து
சங்கராச்சாரியாரையும் விட்டு வைக்காத கங்கனா: ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக கருத்து
UPDATED : ஜூலை 18, 2024 02:21 PM
ADDED : ஜூலை 18, 2024 02:07 PM

மும்பை: உத்தவ் தாக்கரேவுக்கு துரோகம் நடந்துள்ளதாக கூறிய ஜோதிர்மட சங்கராச்சாரியாருக்கு பதிலளித்துள்ள பா.ஜ., எம்.பி., கங்கனா ரணாவத், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோதிர்மட சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி சுவாமிகள், சமீபத்தில் மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை, மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
பிறகு அவர் கூறுகையில், துரோகம் செய்வது பெரிய பாவங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. உத்தவ் தாக்கரேவுக்கும் துரோகம் நடந்துள்ளது. அவர் எதிர்கொண்ட துரோகத்தால் அனைவரும் வேதனை அடைந்தோம். வஞ்சகம் செய்பவர் ஹிந்துவாக இருக்க முடியாது. அதனை பொறுத்துக் கொள்பவனே ஹிந்து. இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக கங்கனா ரணாவத், எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: அரசியலில் கூட்டணி அமைப்பது , ஒரு கட்சியில் பல பிரிவுகள் இருப்பது பொதுவானதும், அரசியலமைப்புக்கு உட்பட்டதும் ஆகும். காங்கிரஸ் கட்சியும் 1907 மற்றும் 1971 ல் பிளவுபட்டது. ஒரு அரசியல்வாதி அரசியல் செய்யாமல் பானிபூரி விற்பனை செய்வாரா? ஓர் அரசனே குடிமக்களை சுரண்ட துவங்கினால், துரோகம் தான் இறுதி வழி என நம் மதம் கூறுகிறது.
சங்கராச்சாரியார் தனது வார்த்தைகளையும், செல்வாக்கையும் தவறாக பயன்படுத்தி உள்ளார். ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என விமர்சித்து நமது உணர்வுகளை புண்படுத்தி விட்டார். இதுபோன்ற விமர்சனங்கள் மூலம் ஹிந்து மதத்தை அவமதித்து உள்ளார். இவ்வாறு அந்த பதிவில் கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.