நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஜார்க்கண்ட் அரசு வென்றது
நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஜார்க்கண்ட் அரசு வென்றது
நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஜார்க்கண்ட் அரசு வென்றது
ADDED : பிப் 06, 2024 12:07 AM

ராஞ்சி: முதல்வர் சம்பாய் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசு, 47 -- 29 என்ற வித்தியாசத்தில், நம்பிக்கை ஓட்டெடுப்பில் வென்றது.
நில மோசடி வழக்கில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், சமீபத்தில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்தக் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சம்பாய் சோரன், கடந்த, 2ம் தேதி முதல்வராக பதவியேற்றார்.
மொத்தம், 81 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள சட்டசபையில், 10 நாட்களுக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்படி, சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், 77 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.
இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் அடங்கிய ஆளும் கூட்டணி அரசுக்கு ஆதரவாக, 47 பேர் ஓட்டளித்தனர். இதை எதிர்த்து, 29 பேர் ஓட்டளித்தனர். சுயேச்சை வேட்பாளர் ஒருவர் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.
தற்போதைய சட்டசபையில், பா.ஜ.,வுக்கு, 26 எம்.எல்.ஏ.,க்களும், கூட்டணி கட்சியான, ஏ.ஜே.எஸ்.யு., எனப்படும் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் அமைப்புக்கு, மூன்று பேரும் உள்ளனர்.
முன்னதாக, விலைக்கு வாங்கும் முயற்சி நடக்கலாம் என்ற அச்சத்தில், ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் இரவு ராஞ்சி திரும்பினர்.
நீதிமன்ற அனுமதியைப் பெற்று, கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனும், ஓட்டெடுப்பில் பங்கேற்றார்.
''என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும்படி, பா.ஜ.,வுக்கு சவால் விடுகிறேன். அவ்வாறு நிரூபித்தால், அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்,'' என, ஓட்டெடுப்பில் பங்கேற்ற ஹேமந்த் சோரன் குறிப்பிட்டார்.