மீண்டும் ஜனதா தரிசனம்?: அமைச்சர்களுடன் யோகி ஆலோசனை
மீண்டும் ஜனதா தரிசனம்?: அமைச்சர்களுடன் யோகி ஆலோசனை
மீண்டும் ஜனதா தரிசனம்?: அமைச்சர்களுடன் யோகி ஆலோசனை
UPDATED : ஜூன் 08, 2024 09:02 PM
ADDED : ஜூன் 08, 2024 08:55 PM

லக்னோ: உ.பி.,யில் பா.ஜ. குறைந்த தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் ஜனதா தரிசனம் நடத்துவது குறித்து அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.
நடந்து முடிந்த தேர்தலில் உ.பி., மாநிலத்தில் பா.ஜ., 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சமஜ்வாதி 37 இடங்களிலும் காங்கிரஸ் ஆறு இடங்களிலும் வெற்றி பெற்றன
அதே நேரத்தில் 2014-ல் நடந்த தேர்தலில் பா.ஜ., 71 இடங்களிலும், 2019-ல் 62 இடங்களையும் பெற்றது. இந்நிலையில் தற்போது வெறும் 33 இடங்களை மட்டுமே பெற்றிருப்பது கட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இதனையடுத்து மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் இன்று (08-ம் தேதி) மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வெற்றி குறைந்ததற்கான காரணங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் பற்றியும், தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிர்வாகச் சிக்கல்களைக் கண்டறிந்து தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் தேர்தல் நன்னடத்தை விதி காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஜனதா தரிசனம் ( மக்கள்சந்திப்பு ) நிகழ்ச்சியை வரும் வியாழக்கிழமை முதல் தொடர்ந்து நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மாநிலத்தில் முதல்வராக பதவியேற்ற நாளில் இருந்து யோகி தினமும் காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை பொதுமக்களை நேரடியாக சந்திக்கும் ஜனதா தரிசனம் ( மக்கள் சந்திப்பு) நடத்தி வந்தார்.இதன்மூலம் மக்களின் குறைகள் எளிதாக தீர்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் மீண்டும் ஜனதா தரிசனம் நிகழ்ச்சியை நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது மேலும் காலி பணியிடங்களில் ஆட்சேர்ப்பு முறையையும் ஆய்வு செய்தார். அப்போது மாநில காவல்துறையில் ஆட் சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிப்பது ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.