Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு பங்கில்லை: முதல் முறையாக மறுத்து பேசிய ஜெய்சங்கர்

சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு பங்கில்லை: முதல் முறையாக மறுத்து பேசிய ஜெய்சங்கர்

சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு பங்கில்லை: முதல் முறையாக மறுத்து பேசிய ஜெய்சங்கர்

சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு பங்கில்லை: முதல் முறையாக மறுத்து பேசிய ஜெய்சங்கர்

ADDED : மே 23, 2025 01:12 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: ''நேரடி இருதரப்பு ஒப்பந்தத்தின் விளைவாகவே இந்தியா - பாக்., இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதில் அமெரிக்க மத்தியஸ்தம் எதுவும் இல்லை,'' என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளிப்படையாக தெரிவித்தார்.

இந்தியா - பாக்., இடையே நடந்து வந்த சண்டையை நிறுத்திக் கொள்வதாக கடந்த, 10ம் தேதி இருதரப்பும் அறிவித்தது. அமெரிக்கா தலையிட்டு மத்தியஸ்தம் செய்ததால் தான் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கூறிவந்தார்.

இதுகுறித்து நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் முதல்முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார்.

பதிலடி


ஐரோப்பிய நாடான நெதர்லாந்து சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர் அங்குள்ள வானொலிக்கு அளித்த பேட்டி:

பஹல்காமில் நடந்தது போன்ற பயங்கரவாத தாக்குதல் நடந்தால் எங்கள் பதிலடி இப்படித்தான் இருக்கும் என்பதையே, 'ஆப்பரேஷன் சிந்துார்' உணர்த்தி உள்ளது.

நாங்கள் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தோம். அவர்கள் பாகிஸ்தானில் இருந்தனர். அவர்கள் எங்கு இருக்கின்றனரோ, அங்கு தானே அடிக்க முடியும்.

'ஆப்பரேஷன் சிந்துார்' இன்னும் உயிர்ப்புடன் தான் உள்ளது. அதற்கான சண்டை போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருதரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ராணுவ நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாக்., விருப்பம்


சண்டையை நிறுத்திக்கொள்ள விரும்புவதாக பாகிஸ்தான் தரப்புதான் முதலில் தெரிவித்தது. அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு சண்டை நிறுத்தம் அறிவித்தோம்.

அமெரிக்க துணை அதிபர் வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் பிரதமர் மோடியிடமும், என்னிடமும் பேசினர்.

அவர்களிடம் நாங்கள் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தினோம். சண்டையை நிறுத்திக்கொள்ள பாக்., விரும்பினால், அவர்கள் நேரடியாக எங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறினோம். இறுதியில் அதுதான் நடந்தது.

இந்த சண்டை நிறுத்தத்தில் வெளிநாட்டு மத்தியஸ்தம் குறிப்பாக அமெரிக்காவின் மத்தியஸ்தம் எதுவும் இல்லை.

காஷ்மீர் விவகாரத்தில் பேசுவதற்கு எதுவும் இல்லை. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. ஒரு நாடு தங்களுக்கு சொந்தமான பகுதி குறித்து பேச என்ன இருக்கிறது?

காஷ்மீரின் ஒரு பகுதியை, 1947 - 48 முதல் பாகிஸ்தான் ஆக்கிர மித்து வைத்துள்ளது. அப்பகுதியை விட்டு வெளியேறும்படி அவர்களுடன் பேச விரும்புகிறோம்.

இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

பாக்., ராணுவ தளபதி சதி

பஹல்காம் தாக்குதல் பாக்., ராணுவத்தால் திட்டமிடப்பட்ட சதி என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குற்றஞ்சாட்டி உள்ளார். பேட்டியில் அவர் தொடர்ந்து பேசியதாவது:பஹல்காமில், சுற்றுலா பயணியர் குறிவைத்து கொல்லப்பட்டனர். ஹிந்துக்கள் என்பதை உறுதி செய்த பின் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இது மிக தெளிவாக திட்டமிட்டு செய்யப்பட்ட சதி. காஷ்மீர் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமான சுற்றுலாவை சிதைப்பதும், மத பிரிவினையை ஏற்படுத்துவதுமே பாக்., ராணுவத்தின் நோக்கம். அவர்களின் அறிவுறுத்தலின்படி தான் இந்த தாக்குதலை பயங்கரவாதிகள் நிகழ்த்தி உள்ளனர். பாக்., ராணுவ தளபதி ஆசிம் முனீரின் பேச்சுக்கும், பஹல்காம் தாக்குதலுக்கும் ஒரு ஒற்றுமையை காண முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us