பெங்களூரில் வாட்டி வதைக்கும் குளிர்
பெங்களூரில் வாட்டி வதைக்கும் குளிர்
பெங்களூரில் வாட்டி வதைக்கும் குளிர்
ADDED : ஜன 03, 2024 11:21 PM
பெங்களூரு: பெங்களூரில் குளிரின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஸ்வெட்டர், மப்ளர், சாக்ஸ் இல்லாமல் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத அளவுக்கு கடும் குளிர் நிலவுகிறது.
பெங்களூரில் குளிரின் தாக்கம், தொடர்ந்து அதிகரிக்கிறது. அதிகாலை வீட்டில் இருந்து, வெளியே கால் வைத்தால் ஊட்டி, குடகு, ஏற்காடு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இருப்பதைப் போன்ற அனுபவம் ஏற்படுகிறது.
காலையில் நடைப்பயிற்சிக்கு செல்வோர், பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்வோர், பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் குளிரால் அவதிப்படுகின்றனர். லால்பாக், கப்பன் பூங்காவில் அடர்த்தியான பனிமூட்டம் ஏற்படுகிறது. இந்த அற்புத காட்சியை காணவே, பலரும் குவிகின்றனர்.
பெங்களூரில் மதியம் 12:00 மணியானாலும், சூரியன் தென்படுவது இல்லை. நாள் முழுதும் மேகமூட்டமாகவே இருக்கிறது.
ஸ்வெட்டர், மப்ளர், ஜெர்கின், கைகளில் கிளவுஸ், கால்களில் சாக்ஸ் அணியாமல் வெளியே வர முடிவதில்லை.
புறநகர் பகுதிகளில், அதிகாலை வேளையில் வீடுகளின் முன்பாக தீ மூட்டி குளிர் காய்வதை காண முடிகிறது. வீட்டை விட்டு வெளியே வரவே, மக்கள் அஞ்சுகின்றனர்.
குளிரின் தாக்கத்தால், மக்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கிறது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர்.
வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரிகள் கூறுகையில், 'பெங்களூரில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து வருகிறது. ஜனவரி, பிப்ரவரியில் இதே சூழ்நிலை இருக்கும். குறைந்தபட்ச வெப்ப நிலை 16 டிகிரி செல்ஷியஸ், அதிகபட்சம் 28 டிகிரி செல்ஷியஸாக பதிவாகிறது' என்றனர்.