'ஜாதிவாரி சர்வேயில் மக்கள் பங்கேற்பது கட்டாயமில்லை'
'ஜாதிவாரி சர்வேயில் மக்கள் பங்கேற்பது கட்டாயமில்லை'
'ஜாதிவாரி சர்வேயில் மக்கள் பங்கேற்பது கட்டாயமில்லை'
ADDED : செப் 26, 2025 06:19 AM

பெங்களூரு: 'ஜாதிவாரி சர்வேயில், மக்கள் பங்கேற்பது கட்டாயம் இல்லை' என, கர்நாடக உயர் நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கர்நாடகாவில் கடந்த 22ம் தேதி ஜாதிவாரி சர்வே துவங்கியது. இதுதொடர்பாக, கடந்த ஆகஸ்ட் 13ல் மாநில காங்., அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, அகில கர்நாடக பிராமண மகாசபா, கர்நாடக ஒக்கலிகர் சங்கம், மூத்த வக்கீல் சுப்பாரெட்டி ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த பொதுநல மனுக்களை, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி சி.எம்.ஜோஷி அமர்வு விசாரிக்கிறது.
நேற்று நடந்த விசாரணையின் போது, கர்நாடக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி வாதிடுகையில், ''ஜாதிவாரி சர்வேயில் சேகரிக்கப்படும் தரவுகளை பாதுகாக்கும் பொறுப்பு, மின் ஆளுமை துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விரைவில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வோம்,'' என்றார்.
அரசு தரப்பில் மூத்த வக்கீல் ரவிவர்ம குமார் வாதிடுகையில், ''ஜாதிவாரி சர்வேயில் மக்கள் பங்கேற்பது தன்னார்வமானது. யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம்,'' என்றார்.
நீதிபதிகள், 'சர்வே செயல்முறையை நிறுத்து வது பொருத்தமானது அல்ல. இதில் சேகரிக்கப்படும் தரவுகளை, பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பாதுகாத்து ரகசியமாக வைத்திருக்க வேண்டும். மக்கள் தாமாக முன்வந்து சர்வேயில் பங்கேற்கலாம்.
'எந்த தகவலையும் வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை. சர்வேயில் ஈடுபடுவோர், அதில் பங்கேற்க மக்களை வற்புறுத்தக் கூடாது' என தெரிவித்து, டிசம்பர் இரண்டாவது வாரத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.