ஜி.எஸ்.டி.,யில் சீர்திருத்தம் தொடரும் வரிச்சுமை குறையும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி
ஜி.எஸ்.டி.,யில் சீர்திருத்தம் தொடரும் வரிச்சுமை குறையும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி
ஜி.எஸ்.டி.,யில் சீர்திருத்தம் தொடரும் வரிச்சுமை குறையும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி
ADDED : செப் 26, 2025 06:13 AM

கிரேட்டர் நொய்டா: ''ஜி.எஸ்.டி.,யில் சீர்திருத்தங்கள் தொடரும். நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி அடையும் போது, மக்கள் மீதான வரிச்சுமையும் குறையும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கவுதம் புத்தா நகர் மாவட்டத்துக்கு நேற்று வந்த பிரதமர் மோடி, கிரேட்டர் நொய்டா பகுதியில் நடந்த, 'உத்தர பிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சி - 2025'ஐ துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
இன்று, நாடு பெருமையுடன், 'ஜி.எஸ்.டி., சேமிப்பு திருவிழா'-வை கொண்டாடுகிறது. இத்துடன் நாங்கள் நிற்க மாட்டோம். நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவோம்.
பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி அடையும் போது, வரிச்சுமையையும் குறைப்போம். ஜி.எஸ்.டி.,யிலும் சீர்திருத்தங்கள் தொடரும்.
தற்சார்பு இந்தியா வருமான வரி விலக்கு, ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்களால், நாட்டு மக்கள் இந்த ஆண்டு மட்டும், 2.5 லட்சம் கோடி ரூபாய் சேமிக்க முடியும். பா.ஜ., அரசு வரிகளை குறைத்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்தி, வருமானம் மற்றும் சேமிப்பை அதிகரித்துஉள்ளது.
இதனால், ஏழை எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் உட்பட அனைத்து தரப்பினரும் பயனடைந்துள்ளனர். இதை பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து மக்களை குழப்பி வருகின்றன.
உண்மை என்னவென்றால், மத்தியில் காங்., ஆட்சியில் இருந்த போது, 'வரி சுரண்டல்' நடந்தது. அதிக வரிகளால் சாதாரண மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். நாங்கள் வரிச்சுமையை குறைத்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்தி உள்ளோம்.
நாட்டின் லட்சியமும், வழிகாட்டும் மந்திரமும் 'தற்சார்பு இந்தியா' மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பது மிகப்பெரிய ஆபத்து. மாறி வரும் உலகில், ஒரு நாடு மற்ற நாடுகளை எவ்வளவு அதிகமாக சார்ந்திருக்கிறதோ, அவ்வளவு அதன் வளர்ச்சி சமரசம் செய்யப்படுகிறது.
நம் நாடு தற்சார்பு அடைய வேண்டும். இங்கு தயாரிக்கக்கூடிய ஒவ்வொரு பொருளும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும்.
'இந்தியாவில் தயாரிப்போம்; உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்போம்' என்ற கொள்கையை, தொழில் துறையினர் பின்பற்ற வேண்டும். உள்ளூரிலேயே பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். நாட்டு மக்களும் உள்ளூர் பொருட்களையே வாங்க வேண்டும்.
வலு சேர்க்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையின் கீழ், அனைத்து துறைகளிலும் உ.பி., வளர்ச்சி அடைந்து வருகிறது. நாட்டில் அதிக எண்ணிக்கையிலான விரைவுச்சாலைகள், சர்வதேச விமான நிலையங்கள் இங்கு உள்ளன. நாட்டின் மொத்த மொபைல் போன் உற்பத்தியில் 55 சதவீதம் உ.பி.,யில் நடக்கிறது.
செமி கண்டக்டர் துறையில், நாட்டின் தற்சார்பு நடவடிக்கைக்கு உ.பி., வலு சேர்க்கும். அங்கு ஒரு பெரிய செமி கண்டக்டர் ஆலை விரைவில் செயல்படும். நம் ஆயுதப் படைகளும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை தான் பயன்படுத்தி வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.