மருத்துவ சிகிச்சை கட்டண விபரம் தகவல் பலகை வைப்பது கட்டாயம்
மருத்துவ சிகிச்சை கட்டண விபரம் தகவல் பலகை வைப்பது கட்டாயம்
மருத்துவ சிகிச்சை கட்டண விபரம் தகவல் பலகை வைப்பது கட்டாயம்
ADDED : பிப் 10, 2024 11:52 PM

கலபுரகி : ''தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டண விபரத்தை தகவல் பலகையில் வெளியிடுவது கட்டாயம். நோயாளிகளுக்கு செலவு விபரத்தை சரியாக விளக்க வேண்டும்,'' என, மருத்துவ கல்வி துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் தெரிவித்தார்.
கலபுரகி அரசு மருத்துவ கல்லுாரி, மருத்துவமனையில் அமைக்கப்பட்ட, அவசர கால விபத்து சிகிச்சை மையத்தை, மருத்துவ கல்வி துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல், நேற்று துவக்கிவைத்தார்.
பின், அவர் பேசியதாவது:
ஏழைகள் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே, அரசு தரப்பில் பல்வேறு மருத்துவ திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. விபத்துகள் நடக்கும்போது, அவசர கால சிகிச்சை வழங்குவதற்கு, பெங்களூரில் 2, மைசூரில் ஒரு சிகிச்சை மையம் செயல்பாட்டில் உள்ளன.
கலபுரகியில் நான்காவது அவசர கால சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளன. இது கல்யாண கர்நாடகா மக்களுக்கு வசதியாக இருக்கும்.
சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டண விபரத்தை தகவல் பலகையில் வெளியிடுவது கட்டாயம். நோயாளிகளுக்கு செலவு விபரத்தை சரியாக விளக்க வேண்டும். அதன் பின், சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும்.
இது போன்று, அரசு மருத்துவமனைகளிலும் தகவல் பலகை வைப்பது நல்லது. நான் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிரானவன் அல்ல. நோயாளிகளிடம் கொள்ளை அடிக்க கூடாது.
விரைவில், 50 கோடி ரூபாய் செலவில் இரண்டு தாய், சேய் மருத்துவமனைகள் அமைக்கப்படும். கலபுரகியில் ஆரோக்கிய சேவை சிறந்த முறையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.