Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி இஸ்ரோ சோதனை வெற்றி

விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி இஸ்ரோ சோதனை வெற்றி

விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி இஸ்ரோ சோதனை வெற்றி

விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி இஸ்ரோ சோதனை வெற்றி

ADDED : ஜன 06, 2024 01:25 AM


Google News
பெங்களூரு, விண்ணில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக, 'பியூயல் செல்' எனப்படும் எரிபொருள் கலனை உருவாக்கிய இஸ்ரோ, அதை விண்ணில் செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

விண்வெளியில் உள்ள கருந்துளைகள் முதலியவற்றை வெளியிடும், 'எக்ஸ்ரே' கதிர்கள் வாயிலாக ஆராய்ச்சி செய்யும், 'எக்போசாட்' செயற்கைக்கோளை விண்வெளியில் நிலைநிறுத்துவதற்காக, பி.எஸ்.எல்.வி., - சி58 ராக்கெட்டை கடந்த 1ம் தேதி இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் விண்ணில் ஏவியது.

பூமியில் இருந்து 650 கி.மீ., உயரத்தில், இந்த 'எக்போசாட்' செயற்கைகோளை, பி.எஸ்.எல்.வி., - சி58 ராக்கெட் நிலைநிறுத்தியது.

பின், பி.எஸ்.எல்.வி., - சி58 ராக்கெட்டின் மூன்றாவது கட்ட ஏவு ஊர்தி, பூமியில் இருந்து 350 கி.மீ., தாழ்வட்ட பாதைக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த மூன்றாம் கட்ட ஏவு ஊர்தியை ஆய்வுக்கான களமாக பயன்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதன் ஒரு பகுதியாக, விண்வெளியில் எரிபொருள் ஆராய்ச்சிக்கான சோதனையை இஸ்ரோ மேற்கொண்டது.

இதற்காக, இஸ்ரோ உருவாக்கிய, 'பாலிமர் எலெக்ட்ரோலைட் மெம்ப்ரேன் செல்' எனப்படும், பாலிமர் எலக்ட்ரோலைட் செல் சவ்வு எடுத்து செல்லப்பட்டது.

இந்த கலத்தின் ஒரு புறம் ஹைட்ரஜனும், மறுபுறம் ஆக்சிஜன் வாயுவும் நிரப்பப்பட்டு, இதன் நடுவில் ஒரு சவ்வு இருக்கும்.

விண்வெளியில் ஹைட்ரஜன் வாயுவையும் ஆக்சிஜன் வாயுவையும் சவ்வு வழியாக இணைக்கும்போது, அதிலிருந்து கழிவாக சுத்தமான நீர் உருவாகும்.

மேலும், இந்த சவ்வு வழியாக ஹைட்ரஜன் செல்லும் போது மின்சுற்று உருவாகி, அதிலிருந்து மின்சாரம் உருவாகும். எனவே, ஹைட்ரஜன் - ஆக்சிஜனை கொண்டு தண்ணீரையும், வெப்பத்தையும் சுலபமாக விண்வெளியில் நாம் பெற முடியும் என, இஸ்ரோ நடத்திய சோதனையில் தரவுகளை பதிவு செய்துள்ளது.

இந்த மின்கலம் விண்வெளியில் எப்படி வேலை செய்யும் என்பதை இந்த ஆய்வு வாயிலாக இஸ்ரோ வெற்றிகரமாக சோதனை செய்து முடிவுகளை கண்டறிந்துள்ளது.

இந்த சோதனையில் 180 வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us