Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஈரான் அணு ஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் குண்டு மழை: அணு விஞ்ஞானிகள், 3 ராணுவ தளபதி பலி

ஈரான் அணு ஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் குண்டு மழை: அணு விஞ்ஞானிகள், 3 ராணுவ தளபதி பலி

ஈரான் அணு ஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் குண்டு மழை: அணு விஞ்ஞானிகள், 3 ராணுவ தளபதி பலி

ஈரான் அணு ஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் குண்டு மழை: அணு விஞ்ஞானிகள், 3 ராணுவ தளபதி பலி

UPDATED : ஜூன் 14, 2025 01:28 PMADDED : ஜூன் 14, 2025 12:30 AM


Google News
Latest Tamil News
துபாய்:ஈரானின் அணு ஆயுத தளங்கள், ஏவுகணை மையங்கள் மீது இஸ்ரேல் நேற்று சரமாரியான வான்வழி தாக்குதல் நடத்தியது. இருநூறுக்கு மேற்பட்ட போர் விமானங்கள் பங்கேற்ற இந்த தாக்குதலில், ஈரானின் மூன்று முக்கிய படைத்தளபதிகள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர். மிகப்பெரிய அணு ஆயுத தளம் பலத்த சேதம் அடைந்தது.

மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த, 1980களில் இருந்தே மோதல் போக்கு நிலவுகிறது. இஸ்ரேலை ஒரு நாடாகவே அங்கீகரிக்க மறுத்து, அந்நாட்டுக்கு எதிராக பாலஸ்தீன பயங்கரவாத இயக்கமான ஹமாஸ், லெபனானின் ஹெஸ்பொல்லா ஆகியவற்றுக்கு ஈரான் ஆயுதங்கள், நிதி, பயிற்சி வழங்கி வருகிறது.

சின்னஞ்சிறு நாடாக இருந்தாலும் ராணுவ வலிமையும் அணு ஆயுதங்களும் கொண்ட இஸ்ரேலை, அணுகுண்டுகளால் மட்டுமே வீழ்த்த முடியும் என ஈரான் நம்புகிறது.

ஆகவே, அணுசக்தி உற்பத்தி செய்வதாக கூறிக்கொண்டு, சில ஆண்டுகளாக அணு ஆயுத உற்பத்தியில் அது ஈடுபட்டுள்ளதாக, இஸ்ரேலின் பாதுகாவலனான அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

Image 1430614

அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் வெற்றி அடைந்தால், மத்திய கிழக்கு பிராந்தியம் மட்டுமின்றி, உலகம் முழுவதற்கும் ஆபத்து என அமெரிக்கா சொல்கிறது. மேலைநாடுகளும் அதை ஆமோதிக்கின்றன.

இதனால், அணுகுண்டு தயாரிப்பை ஈரான் முழுமையாக கைவிட அழுத்தம் கொடுக்கும் வகையில், அந்நாட்டின் மீது அவை பொருளாதார தடை விதித்தன. எனினும், ஈரானின் முயற்சிகள் நிற்கவில்லை.

'ஈரான் தற்போதுல 60 சதவீதம் வரை செறிவூட்டிய யுரேனியத்தை வைத்திருக்கிறது. 90 சதவீதம் வரை செறிவூட்டினால் அவற்றை அணு ஆயுதமாக பயன்படுத்த முடியும். ஓராண்டுக்குள் ஈரான் அந்த நிலையை எட்டும்' என இஸ்ரேல் கூறியது. சர்வதேச அணு ஆயுத முகமை அந்த தகவலை உறுதி செய்தது.

எனவே, முன்னெச்சரிக்கையாக ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்கி அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டு வந்தது. தாக்க வேண்டாம் என்று இஸ்ரேலிடம் கூறிய அதிபர் டிரம்ப், ஈரானுடன் சமாதான பேச்சை துவங்கினார். அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியை ஈரான் அறவே கைவிட வேண்டும் என நிபந்தனை விதித்தார்.

ஈரான் அதை ஏற்கவில்லை. 'பிராந்தியத்தில் இஸ்ரேல் உட்பட எந்த நாட்டிடமும் அணு ஆயுதங்கள் இல்லாத நிலை உருவானால், உங்கள் யோசனையை பரிசீலிக்கலாம். அதுவரை அணு ஆராய்ச்சியை நாங்கள் நிறுத்த மாட்டோம். மின்சார உற்பத்திக்கும், மருந்து தயாரிப்புக்கும் எங்களுக்கு அணு தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. எனவே, எங்கள் நாட்டில் கிடைக்கும் யுரேனியத்தை நாங்கள் செறிவூட்டுவதை எவரும் தடுக்க முடியாது' என கூறியது. இதனால் பேச்சு தோல்வி அடைந்தது.

அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என, இஸ்ரேல் கூறியிருந்தது. அதன்படி நேற்று அதிகாலை 'ஆப்பரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் ஈரானில் அணுசக்தி நிலையங்கள், ஆராய்ச்சி கூடங்கள், ராணுவ தளங்கள், பாதாள சேமிப்பு கிடங்குகள், குகைகள் என 100 இலக்குகளை குறிவைத்து, 200க்கு மேற்பட்ட போர் விமானங்கள் வாயிலாக இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது.

ரகசிய தளங்கள்


இந்த தாக்குதலுக்கு பல ஆண்டுகளாக இஸ்ரேல் திட்டம் தீட்டி வந்தது. அதன் ஒரு பகுதியாக ஈரானுக்குள் ஊடுருவிய இஸ்ரேல் உளவுப்படையான மொசாத் அமைப்பின் வீரர்கள், இலக்குகளின் அருகே ரகசிய தளங்கள் அமைத்து ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் தயார் நிலையில் வைத்திருந்தனர். விமான தாக்குதலை தொடங்குவதற்கு சற்று முன்னதாக ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் ரிமோட் கன்ட்ரோல் முறையில் ஆக்டிவேட் செய்து, ஈரானின் வான் கவச கட்டமைப்பை துல்லியமாக தாக்கி முடக்கினர். இதனால் இஸ்ரேல் விமானங்கள், எந்த எதிர்ப்பும் இல்லாமல் பறந்து வந்து இலக்குகளை தாக்க ஏதுவானது.

ஒரே நேரத்தில் ஈரான் முழுவதும் பரவலாக 100 இடங்களில் தொடர்ந்து வெடி சத்தம் கேட்டது; கரும்புகை வானுயரத்திற்கு எழுந்தது. அணு ஆயுத தளங்கள் தாக்கப்பட்டாலும், கதிரியக்க அளவுகளில் தற்போது வரை உயர்வு இல்லை என சர்வதேச அணுசக்தி முகமை கூறியதை பார்க்கையில், செறிவூட்டும் உலைகள் மற்றும் யுரேனிய சேமிப்பு கிடங்குகளை இஸ்ரேல் குண்டுகள் தகர்க்கவில்லை என தோன்றுகிறது. கதிர்வீச்சை தவிர்க்கும் விதமாக, கட்டமைப்பை மட்டும் தகர்க்க குறி வைத்திருக்கலாம் என ஒரு கருத்து நிலவுகிறது.

எனினும், ராணுவ தளங்களையும் தளபதிகளின் முகாம்களையும் அணு விஞ்ஞானிகளின் இருப்பிடங்களையும் இஸ்ரேல் விமானங்கள் துல்லியமாக தாக்கியுள்ளன. அணு விஞ்ஞானிகளான முஹமது மெஹ்டி தெஹ்ரான்சி மற்றும் பெரெய்டூன் அப்பாஸி ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரான் ராணுவ தளபதிகளில் முக்கியமான மூவர் பலியாகினர். ஈரான் அரசே அதை உறுதிப்படுத்தியது.

வான்வெளி மூடல்


சில மணிநேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதலை துவங்கியது. நூற்றுக்கணக்கான ட்ரோன்களில் குண்டுகளை வைத்து இஸ்ரேலுக்குள் செலுத்தியது. பெரும்பாலான ட்ரோன்களை நாட்டில் நுழையுமுன்பே தடுத்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேல், ஈராக், ஈரான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியுள்ளன. இந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தூதரகங்கள், கடற்படை தளங்கள் ஆகியவற்றில் இருந்து நாடு திரும்ப விரும்புவோர் உடனே வரலாம் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது, அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக போரில் குதிக்க தயாராவதை காட்டுகிறது. அது நடந்தால், மத்திய கிழக்கில் நிலைமை மிகவும் மோசமாகும். அது உலகம் பூராவும் தாக்கம் ஏற்படுத்தும்.

பிரதமர் மோடியிடம் விளக்கிய இஸ்ரேல் பிரதமர்


ஈரானின் அணு ஆயுத தளங்கள், ஏவுகணை உற்பத்தி மையங்கள் மீதான தாக்குதலின் நோக்கம் குறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரதமர் மோடியை தொடர்புகொண்டு விளக்கம் அளித்தார்.

இந்த தாக்குதல் குறித்து சர்வதேச நாடுகளின் தலைவர்களை தொடர்புகொண்டு இஸ்ரேல்

பிரதமர் நெதன்யாகு பேசி வருகிறார். பிரதமர் மோடியுடனும் தொலைபேசியில் நேற்று

பேசினார்.அவரிடம் பிரதமர் மோடி, பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை

விரைவில் சரிசெய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். நிதானத்தை

கடைபிடிக்கும் படியும், பதற்றத்தை குறைக்கும் படியும் கூறினார்.

அணு ஆயுத அச்சுறுத்தல் நீங்கும் வரை தாக்குவோம்


ஆப்பரேஷன் ரைசிங் லயன்' நடவடிக்கை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: ஈரான் ஆட்சியாளர்கள் பல ஆண்டுகளாக இஸ்ரேலை அழிக்க வேண்டும் என வெளிப்படையாக அழைப்பு விடுத்து வருகின்றனர். அதற்காக அணு ஆயுதங்களை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.அவர்களிடம் ஒன்பது அணுகுண்டு தயாரிக்கும் அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ளது. சில மாதங்களாக அந்த யுரேனியத்தை ஆயுதமாக்கும் செயலில் ஈரான் இறங்கியுள்ளது. ஈரானின் முக்கிய அணு செறிவூட்டல் மையமான நடன்ஸ் அணுசக்தி தளத்தை தாக்கியுள்ளோம். உடனடி அறிகுறிகளுக்கு எதிராக செயல்படத் தவறியதால் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டது. நாங்கள் சரியான நேரத்தில் செயல்பட்டு உள்ளோம். அணு ஆயுத அச்சுறுத்தல் நீங்க எத்தனை நாள் ஆகுமோ, அத்தனை நாட்களுக்கு தாக்குதல் தொடரும்.



ஈரான் தளபதிகள் மூவர் பலி


நேற்றைய தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதிகளையும் இஸ்ரேல் குறிவைத்தது. அதில் புரட்சிகர ஆயுத படையின் தளபதி ஹொசைன் சலாமி, ஈரானிய படைகளின் தலைமை தளபதி முஹமது பாகேரி, ஏவுகணை திட்டங்களுக்கான தளபதி அமிர் அலி ஹஜிசாதே பலியாகினர். இறந்த ராணுவ தளபதிகளுக்கு பதிலாக உடனடியாக புதிய தளபதிகளை ஈரான் உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனி நியமித்தார்.



இஸ்ரேலுக்கு கடும் தண்டனை தருவோம்


ஈரான் உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனி வெளியிட்ட அறிக்கையில், 'ஈரானின் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து, இஸ்ரேல் கொடூர தாக்குதல்களை நடத்தியது. அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும். 'நம் படைகள் பதிலடி தராமல் விடமாட்டார்கள். இஸ்ரேலின் தாக்குதலில், பல தளபதிகள் மற்றும் விஞ்ஞானிகள் உயிர் தியாகம் செய்துள்ளனர்' என கூறினார்.



எதுவும் மிச்சமிருக்காது: டிரம்ப்


அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு: ஈரானிடம் பல முறை அணுசக்தி ஒப்பந்தத்துக்கு உடன்படுங்கள் என வலியுறுத்தினேன். அவர்களின் படை தளபதிகள் தைரியமாக பேசிக்கொண்டு இருந்தனர். தற்போது அவர்கள் யாரும் உயிருடன் இல்லை. ஈரான் ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும், இல்லையெனில் எதுவும் மிச்சமிருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.



கடத்திச் சென்ற மொசாட்


ஈரானின் அணுசக்தி தளங்கள், ஏவுகணை மையங்கள் ஆகியவற்றை இஸ்ரேல் ராணுவம் துல்லியமாக தாக்கியதன் பின்னணியில் மொசாட் உளவு அமைப்பு முக்கிய பங்கு வகித்தது தெரியவந்துள்ளது. இவர்கள் ஆயுதங்களை மத்திய ஈரானுக்கு கடத்திச் சென்று அங்கு உள்ள வான்வழி தாக்குதல்களை முறியடிக்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அருகே வைத்தனர். இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக அந்த அமைப்புகளை அழித்தனர். மேலும், வெடிபொருட்கள் உடன் கூடிய ட்ரோன்களை ஏவுவதற்காக ஈரானுக்குள் ட்ரோன் தளத்தை இஸ்ரேல் அமைத்தது. அதன் பின் இஸ்ரேலின், போர் விமானங்கள் நுழைந்து ஈரானின் அணு ஆயுத தளங்கள் உள்ளிட்டவற்றை நாசம் செய்தன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us