துாய்மையான நகரங்களாக இந்துார், சூரத் தேர்வு
துாய்மையான நகரங்களாக இந்துார், சூரத் தேர்வு
துாய்மையான நகரங்களாக இந்துார், சூரத் தேர்வு
UPDATED : ஜன 12, 2024 08:20 PM
ADDED : ஜன 12, 2024 01:19 AM

புதுடில்லி,மத்திய பிரதேசத்தின் இந்துார், குஜராத்தின் சூரத் ஆகியவை நாட்டின் மிக துாய்மையான நகரங்களுக்கான விருதுகளை பெற்றுள்ளன.
நாட்டின் மிக துாய்மையான நகரங்களை தேர்ந்தெடுத்து, 'ஸ்வச் சர்வேக் ஷன் விருது' ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.
மத்திய அரசு நடத்தும் இந்த மிகப் பெரிய துாய்மை கருத்துக் கணிப்பில், பொது மக்களின் கருத்துக்களும் பெறப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
கருத்துக் கணிப்பு
கடந்த 2016 முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2023ம் ஆண்டுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று புதுடில்லியில் வெளியிட்டு விருதுகளை வழங்கினார்.
ஒரு லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை உடைய துாய்மையான நகரங்களுக்கான பிரிவில், மத்திய பிரதேசத்தின் இந்துார் நகரம் தொடர்ந்து ஏழாவது முறையாக முதலிடத்தை பிடித்தது.
இந்த முறை, குஜராத்தின் சூரத் நகரமும் முதலாவது இடத்தை பகிர்ந்து கொண்டது. மஹாராஷ்டிராவின் நவி மும்பை நகரம், மூன்றாவது இடத்தை பிடித்தது.
முதல், 10 நகரங்களின் பட்டியலில், ஆந்திராவின் விசாகப்பட்டினம், விஜயவாடா, திருப்பதி ஆகியவை, முறையே, 4,6,8 வது இடங்களை பிடித்துள்ளன.
முதல் 10 இடங்களில் தமிழக நகரங்கள் எதுவும் இடம் பெறவில்லை. திருச்சிக்கு, 112வது இடம் கிடைத்துள்ளது. கழிவு மேலாண்மை, மறு சுழற்சி பயன்பாடு ஆகியவற்றை மையமாக வைத்து, இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டது.
12 கோடி மக்கள்
துாய்மை பணியில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கான வரிசையில் மஹாராஷ்டிரா முதல் இடத்தையும், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் அதற்கு அடுத்தடுத்த இடங்களையும் பெற்றன. மாநிலங்களுக்கான பட்டியலில், தமிழகம், 10வது இடத்தை பிடித்துள்ளது.
கங்கை கரையோரம் உள்ள துாய்மையான நகரங்களுக்கான பிரிவில், உத்தர பிரதேசத்தின் வாரணாசி முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்த கருத்துக் கணிப்பில், 4,447 உள்ளாட்சி அமைப்புகள் பங்கேற்றன. 12 கோடி மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. வெற்றி பெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.