Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 'இந்தியருக்கு விலங்கு பூட்டி கொடுமை; டிரம்ப் உடன் மோடி பேச வேண்டும்'

'இந்தியருக்கு விலங்கு பூட்டி கொடுமை; டிரம்ப் உடன் மோடி பேச வேண்டும்'

'இந்தியருக்கு விலங்கு பூட்டி கொடுமை; டிரம்ப் உடன் மோடி பேச வேண்டும்'

'இந்தியருக்கு விலங்கு பூட்டி கொடுமை; டிரம்ப் உடன் மோடி பேச வேண்டும்'

ADDED : ஜூன் 11, 2025 02:16 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: 'அமெரிக்காவில், இந்தியர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை தடுத்து நிறுத்தும்படி, அந்நாட்டு அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி உடனே பேச்சு நடத்த வேண்டும்' என, காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இந்தாண்டு ஜனவரியில் பதவியேற்றதில் இருந்து, சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவரை சொந்த நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளார்.

சமூக வலைதளம்


இதைத் தவிர, சமூக வலைதளத்தில், அமெரிக்காவுக்கு எதிராகவும், இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்தும் பதிவிட்டவர்களையும் குறிவைத்து, கட்டாயமாக வெளியேற்றி வருகிறார். இந்தாண்டு ஜனவரியில் இருந்து, 1,085 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் படித்து அங்கேயே பணியாற்றும், இன்ஜினியர் குணால் ஜெயின் என்பவர், சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்தார்.

அதில் அவர், 'அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் நேவார்க் விமான நிலையத்தில், இந்திய மாணவர் ஒருவரை, கையில் விலங்குடன் போலீசார் தரையில் மண்டியிட வைத்தனர்.

'கண்ணீருடன், தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என, அந்த மாணவர் கதறியது, இதயத்தை கசக்கி பிழிவதாக இருந்தது' என, குறிப்பிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதையடுத்து, நியூயார்க்கில் உள்ள இந்திய துணை துாதரகம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'இந்த விவகாரம் தொடர்பாக, அங்குள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்' என, குறிப்பிட்டுள்ளது.

அச்சுறுத்தல்


இந்த விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து காங்., பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது.

'அவர்களை காக்க வேண்டிய கடமை, மத்திய அரசுக்கு உள்ளது. எனவே, அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான இதுபோன்ற அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த, அந்நாட்டு அதிபர் டிரம்பிடம் நம் பிரதமர் மோடி பேச்சு நடத்த வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் சமூக வலைதளத்தில் காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கெரா கூறுகையில், 'அமெரிக்க விமான நிலையத்தில் இந்தியர் ஒருவர் துன்புறுத்தப்படும் காட்சி, மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

'இதுபோன்ற ஓர் அவமானத்தை, நாம் ஏன் பொறுத்துக்கொள்ள வேண்டும்? அமெரிக்க அரசால் துன்புறுத்தலுக்கு உள்ளான இந்திய துாதரக அதிகாரி தேவயானி கோபர்காடே விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை போன்று, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

'அமெரிக்கா பொறுத்து கொள்ளாது'

இந்தியாவில் உள்ள அமெரிக்க துாதரகம் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், 'அமெரிக்கா, தன் நாட்டிற்கு சட்டப்பூர்வ பயணியரை தொடர்ந்து வரவேற்கிறது. 'எனினும், சட்டவிரோத நுழைவு, விசாக்களை முறைகேடாக பயன்படுத்துதல் போன்ற அமெரிக்க சட்டத்தை மீறும் செயல்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள முடியாது, பொறுத்துக்கொள்ளவும் மாட்டோம்' என, தெரிவித்துஉள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us