Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/உலகின் அறிவு மையமாக இந்தியா மாற வேண்டும் விருப்பம்! பல்கலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

உலகின் அறிவு மையமாக இந்தியா மாற வேண்டும் விருப்பம்! பல்கலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

உலகின் அறிவு மையமாக இந்தியா மாற வேண்டும் விருப்பம்! பல்கலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

உலகின் அறிவு மையமாக இந்தியா மாற வேண்டும் விருப்பம்! பல்கலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

ADDED : ஜூன் 20, 2024 01:07 AM


Google News
ராஜ்கிர், “மேம்பட்ட மற்றும் ஆராய்ச்சி சார்ந்த உயர் கல்வி முறையுடன், உலகின் மிக முக்கியமான அறிவு மையமாக இந்தியா மாற வேண்டும் என்பதே என் நோக்கம்,” என, நாளந்தா பல்கலையின் புதிய வளாக திறப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு நாளந்தா மாவட்டத்தின் ராஜ்கிர் என்ற இடத்தில், கடந்த ஐந்தாம் நுாற்றாண்டில் சர்வதேச அறிஞர்களின் பங்களிப்புகளோடு நாளந்தா பல்கலை உருவாக்கப்பட்டது.

பன்னாட்டு அறிஞர்களின் நுால்கள், ஆய்வுகளோடு சிறப்பாக செயல்பட்ட இந்த பல்கலை, 12ம் நுாற்றாண்டு படையெடுப்பின் போது அழிக்கப்பட்டது.

ஏறத்தாழ 1,600 ஆண்டுகள் பழமையான இந்த நாளந்தா பல்கலையின் கட்டட இடிபாடுகள், கடந்த 2016-ல், 'யுனெஸ்கோ' பாரம்பரிய தளமாக அறிவிக்கப் பட்டது.

ரூ.1,700 கோடி

இந்நிலையில், நாளந்தா பல்கலையின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.

இந்த விழாவில், பீஹார் கவர்னர் ராஜேந்திர அர்லேகர், ஐக்கிய ஜனதா தள தலைவரும், மாநில முதல்வருமான நிதீஷ் குமார், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், 17 நாடுகளின் துாதரக அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த புதிய வளாகம், நாளந்தா பல்கலையின் பழங்கால இடிபாடுகள் உள்ள இடத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

இதில், 40 வகுப்பறைகள் அடங்கிய இரு கல்வி வளாகங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம், 1,900 இருக்கைகள் உள்ளன.

தலா 300 இருக்கைகள் அடங்கிய இரு கலையரங்கங்கள், 550 மாணவர்கள் தங்கக்கூடிய ஒரு மாணவர் விடுதி மற்றும் ஒரு சர்வதேச மையம், 2,000 நபர்கள் வரை பங்கேற்கக் கூடிய அரங்கம், ஒரு ஆசிரிய மன்றம் மற்றும் விளையாட்டு வளாகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

இந்த புதிய வளாகத்துக்கு உள்ளே சோலார் மின் உற்பத்தி, குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு பசுமை வளாகமாக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வளாகத்தின் மொத்த மதிப்பு, 1,700 கோடி ரூபாய்.

நாளந்தா பல்கலையின் புதிய வளாகத்தை திறந்து வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது:

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற, 10 நாட்களுக்குள், நாளந்தா பல்கலைக்கு வருகை தருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாளந்தா என்பது ஒரு பெயர் மட்டுமல்ல. இது ஒரு அடையாளம், மரியாதை, அறிவின் வேர், தாரக மந்திரம்.

அறிவை நெருப்பால் அழிக்க முடியாது என்பதற்கு சாட்சியாக, நாளந்தா பல்கலை விளங்குகிறது. கல்வியின் வளர்ச்சி, பொருளாதாரம் மற்றும் கலாசாரத்தின் வேர்களை ஆழப்படுத்த வழிவகுக்கிறது. இது, வளர்ந்த நாடுகளின் அனுபவத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் ஆர்வம்

வரும் 2047-க்குள், வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற இலக்கை நோக்கி, இந்தியா முன்னேறி வருகிறது. உலகின் கல்வி மற்றும் அறிவின் மையமாக இந்தியா மாற வேண்டும் என்பதே என் நோக்கம். உலகின் மிக முக்கியமான அறிவு மையமாக இந்தியா மீண்டும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு சேவை வழங்கும், 'அடல் டிங்கரிங்' சோதனைக் கூடங்கள், சந்திரயான் மற்றும் ககன்யான் உருவாக்கிய அறிவியல் மீதான ஆர்வம், 'ஸ்டார்ட் அப் இந்தியா' போன்ற திட்டங்கள், இந்தியாவில் 1.30 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக வழிவகுத்துள்ளன.

இந்தியாவில், உலகின் மிக விரிவான மற்றும் முழுமையான திறன் அமைப்பு மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சி சார்ந்த உயர் கல்வி முறையை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த முயற்சி பலனை தரத் துவங்கியுள்ளது.

நம் பல்கலைகளின் உலகளாவிய தரவரிசை மேம்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் வரை, ஒன்பது கல்வி நிறுவனங்கள் மட்டுமே க்யூ.எஸ்., தரவரிசையில் இருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை, 46- ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில், கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு வாரமும் ஒரு பல்கலை நிறுவப்பட்டது; ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொழிற்பயிற்சி நிலையம் திறக்கப்பட்டது; ஒவ்வொரு மூன்று நாட்களிலும் ஒரு அடல் டிங்கரிங் ஆய்வகம் திறக்கப்பட்டது.

புதிய பரிமாணம்

அதே போல், ஒவ்வொரு நாளும் இரு புதிய கல்லுாரிகள் நிறுவப்பட்டன. தற்போது நாட்டில், 23 ஐ.ஐ.டி.,க்கள் உள்ளன. ஐ.ஐ.எம்.,களின் எண்ணிக்கை 13லிருந்து 21 ஆக உயர்ந்துள்ளது.

'எய்ம்ஸ்' மருத்துவமனைகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு உயர்ந்து, 22 ஆக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கையும் இரு மடங்கு அதிகரித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை, இந்திய இளைஞர்களின் கனவுகளுக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது.

இந்தியாவின் முதன்மை கல்வி நிறுவனங்கள் உலகின் பல நாடுகளில், தங்களது வளாகங்களை அமைத்துள்ளன. இதே போல், நாளந்தா பல்கலையும் செய்யும் என, நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மை இன்னும் அழியவில்லையா?

மோடியின் விரலை 'செக்' செய்த நிதீஷ்!நாளந்தா பல்கலையின் புதிய வளாக திறப்பு விழாவில், பிரதமர் மோடியுடன், பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில், நாளந்தா பல்கலை வேந்தர் அரவிந்த் பனகாரியா பேசிக் கொண்டிருந்த போது, பிரதமர் மோடியின் இடது பக்கம் அமர்ந்திருந்த முதல்வர் நிதீஷ் குமார், திடீரென மோடியின் இடது கையை பிடித்து பார்த்தார். இதை சற்றும் எதிர்பாராத பிரதமர் மோடி, அவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். உடனே, பிரதமர் மோடி அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் சுதாரித்துக் கொண்டனர்.பிரதமர் மோடியின் இடது கையின் ஆட்காட்டி விரலில் தேர்தல் மை இருந்தது குறித்து, முதல்வர் நிதீஷ் குமார் கேட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us