சக்திவாய்ந்த பாஸ்போர்ட் 80வது இடத்தில் இந்தியா
சக்திவாய்ந்த பாஸ்போர்ட் 80வது இடத்தில் இந்தியா
சக்திவாய்ந்த பாஸ்போர்ட் 80வது இடத்தில் இந்தியா
ADDED : ஜன 12, 2024 01:26 AM

புதுடில்லி, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனைச் சேர்ந்த 'ஹென்லி' என்ற சர்வ தேச குடியுரிமை மற்றும் குடியேற்ற உரிமை ஆலோசனை நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும், சக்திவாய்ந்த பாஸ்போர்ட் உள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
உலக அளவில் அதிகாரப்பூர்வமான பாஸ்போர்ட் தரவரிசையாக இது கருதப்படுகிறது. உலகெங்கும் உள்ள, 199 நாடுகளில், 227 நகரங்களை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
ஒரு நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர், எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். அல்லது அங்கு சென்று விசா பெற முடியும்; அல்லது மின்னணு முறையில் விசா பெற முடியும் என்பதன் அடிப்படையில், மதிப்பெண் அளிக்கப்பட்டு, தரவரிசை தயாரிக்கப்படுகிறது.
இதன்படி, 2024ம் ஆண்டுக்கான சக்திவாய்ந்த பாஸ்போர்ட் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஆசிய நாடுகளான ஜப்பான், சிங்கப்பூர் ஆகியவை, முதலிடத்தில் உள்ளன.
பின்லாந்து, ஸ்வீடன், தென்கொரியா ஆகியவை இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகியவை மூன்றாவது இடத்திலும் உள்ளன.
கடந்தாண்டைப் போலவே இந்தியா இந்தப் பட்டியலிலும், 80வது இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள், 82 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.
இந்தப் பட்டியலில், நம் அண்டை நாடுகளான மாலத்தீவுகள், 58வது இடத்திலும், சீனா, 62, பூட்டான், 87, மியான்மர், 92, இலங்கை, 96, வங்கதேசம், 97, நேபாளம், 98வது இடத்தில் உள்ளன.
தரவரிசையின் கடைசியில், 104வது இடத்தில், ஆப்கானிஸ்தான் உள்ளது. பாகிஸ்தான், 101, ஈராக், 102, சிரியா, 103வது இடத்தில் உள்ளன.
அமெரிக்கா, கனடா, ஹங்கேரியுடன், ஏழாவது இடத்தில் உள்ளது. பிரிட்டன், நான்காவது இடத்தை பகிர்ந்துள்ளது.