மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி
மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி
மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி
ADDED : மே 20, 2025 12:47 AM

மாலே: அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், சமூக வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இந்தியா - மாலத்தீவு இடையே, 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தெற்காசிய நாடான மாலத்தீவின் உட்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகளுக்கு, இந்தியா நிதி உதவி அளித்து வருகிறது.
எச்.ஐ.சி.டி.பி., என்றழைக்கப்படும், உயர் தாக்க சமூக மேம்பாட்டு திட்டத்தின், மூன்றாம் கட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக, இந்தியா - மாலத்தீவு இடையே 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மொத்தம், 55.28 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தங்கள், மாலத்தீவில் அதிவேக படகு சேவையை மேம்படுத்துவதை பிரதான நோக்கமாக கொண்டுள்ளன. மேலும், மாலத்தீவில் உள்ள விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டங்களுக்கு இந்தியா உதவுவது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் மற்றும் மாலத்தீவுக்கான இந்திய துாதர் ஜி.பாலசுப்ரமணியன் இடையே இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த நிகழ்வின் போது, 'இந்தியாவின் நிதி உதவி அர்த்தமுள்ளதாகவும், பயனுள்ளதாகவும், மாலத்தீவு மக்களின் தேவைக்கு ஏற்ற வகையிலும் உள்ளது. இது, இரு நாடுகளுக்கு இடையலான நீடித்த பிணைப்பை பிரதிபலிக்கிறது' என, அமைச்சர் அப்துல்லா கலீல் குறிப்பிட்டார்.