இந்தியா - பிரான்ஸ் - யு.ஏ.இ. அரபிக்கடலில் கூட்டு பயிற்சி
இந்தியா - பிரான்ஸ் - யு.ஏ.இ. அரபிக்கடலில் கூட்டு பயிற்சி
இந்தியா - பிரான்ஸ் - யு.ஏ.இ. அரபிக்கடலில் கூட்டு பயிற்சி
ADDED : ஜன 25, 2024 12:11 AM

புதுடில்லி :செங்கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு மத்தியில், அரபிக்கடல் பகுதியில், இந்தியா - பிரான்ஸ் - யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் கூட்டு விமானப் பயிற்சியில் ஈடுபட்டன.
பதற்றமான சூழ்நிலை
ஏடன் வளைகுடா, செங்கடல், அரபிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக, வணிகக் கப்பல்கள் மீது, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டது.
இதை, மேற்காசிய நாடான ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி படையினர் நடத்தினர். இதனால் இந்தப் பிராந்தியங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில், அரபிக்கடல் பகுதியில் கடந்த 23ம் தேதி, இந்தியா - பிரான்ஸ் - யு.ஏ.இ. ஆகிய நாடுகளின் விமானப்படை, கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன.
இது குறித்து, நம் விமானப் படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
அரபிக்கடல் பகுதியில் உள்ள இந்திய விமான தகவல் மண்டலங்களில், கடந்த 23ம் தேதி, 'டெசர்ட் நைட்' என்ற பெயரில், இந்தியா - பிரான்ஸ் - யு.ஏ.இ., ஆகிய நாடுகளின் விமானப்படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன. இதில், நம் விமானப்படையின், 'சுகோய் சு - 30, மிக் - 29, சி - 130 ஜே' உள்ளிட்ட விமானங்கள் பங்கேற்றன.
பிரான்ஸ் சார்பில் ரபேல் போர் விமானம், யு.ஏ.இ.,யின், 'எப் - 16' விமானங்களும் இந்த கூட்டு பயிற்சியில் ஈடுபட்டன.
ராணுவ நடவடிக்கை
அப்போது, தகவல் தொடர்பு, அனுபவங்கள், செயல்பாட்டு திறன் உள்ளிட்டவற்றை மூன்று நாடுகளின் வீரர்கள் பகிர்ந்து கொண்டனர்.இந்த பயிற்சி, பிராந்தியத்தில் ராணுவ நடவடிக்கைகள், துாதரக உறவுகள் மேம்பட்டு வருவதை வெளிப்படுத்துகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.