சட்டசபை தேர்தலில் சதியால் தோற்றேன்: ரூபாலி குமுறல்
சட்டசபை தேர்தலில் சதியால் தோற்றேன்: ரூபாலி குமுறல்
சட்டசபை தேர்தலில் சதியால் தோற்றேன்: ரூபாலி குமுறல்
ADDED : பிப் 05, 2024 11:02 PM

துமகூரு: ''சட்டசபை தேர்தலில், உட்கட்சியினர் சதியால் நான் தோல்வி அடைந்தேன். அந்த வலி இன்னும் எனக்கு மறையவில்லை,'' என பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., ரூபாலி நாயக் தெரிவித்தார்.
துமகூரில் மாவட்ட பா.ஜ., செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கார்வார் முன்னாள் எம்.எல்.ஏ., ரூபாலி நாயக் பங்கேற்றார்.
அவர் பேசியதாவது:
சட்டசபை தேர்தலில், எங்கள் கட்சியினர் செய்த சதியால், நான் தோற்றேன். என் வளர்ச்சியை சகிக்க முடியாதவர்கள், உள்குத்து வேலை செய்து என்னை தோற்கடித்தனர். தொகுதியில் பல நற்பணிகளை செய்திருந்தேன். இப்போது காங்கிரஸ் அரசில், எந்த பணிகளும் நடக்கவில்லை.
எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி வளர்ச்சி நிதியை பறித்து, ஐந்து வாக்குறுதி திட்டங்களுக்கு அளித்துள்ளனர். இதற்கு முன் அயோத்தியில், தற்காலிக ஷெட்டில் ராமர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்தால் அழுகை வரும்.
இப்போது பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால், ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ராமலல்லா விக்ரகத்தை பார்த்தால், மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
முன்னாள் அமைச்சர்கள் மாதுசாமி, நாகேஷ் தோற்க, காங்கிரசின் வாக்குறுதி திட்டங்கள் காரணம். காங்கிரசுக்கு ஓட்டு போட்டு, எங்களுடன் போட்டோ எடுத்துக் கொள்வோரும் உள்ளனர். இவர்கள் பா.ஜ., பிரமுகர்கள் அல்ல.
லோக்சபா தேர்தலுக்கு தயாராகும்படி, மேலிடம் உத்தரவிட்டுள்ளது. மத்தியில் மீண்டும் பா.ஜ., அரசு அமையும். ராம ராஜ்யம் உருவாக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.