ஊரை தெரிஞ்சுகிட்டேன்... கட்சியினரை புரிஞ்சுகிட்டேன்! அனந்த்குமார் ஹெக்டே புலம்பல்
ஊரை தெரிஞ்சுகிட்டேன்... கட்சியினரை புரிஞ்சுகிட்டேன்! அனந்த்குமார் ஹெக்டே புலம்பல்
ஊரை தெரிஞ்சுகிட்டேன்... கட்சியினரை புரிஞ்சுகிட்டேன்! அனந்த்குமார் ஹெக்டே புலம்பல்
ADDED : பிப் 10, 2024 11:32 PM

சர்ச்சைக்குரிய வகையில் பேசும், பா.ஜ., ---- எம்.பி., அனந்த்குமார் ஹெக்டேவுக்கு, அவரது கட்சித் தலைவர்களே நெருஞ்சி முள்ளாக மாறி உள்ளனர்.
உத்தர கன்னடா லோக்சபா தொகுதியில் இருந்து, 1996, 1998, 2004, 2009, 2014, 2019 தேர்தல்களில், ஆறு முறை பா.ஜ., எம்.பி.,யாக வெற்றி பெற்றவர் அனந்த்குமார் ஹெக்டே.
ஹிந்துத்துவாவை தீவிரமாக கடைப்பிடிப்பவர். ஹிந்துக்களுக்கு ஏதாவது அநீதி நடந்தால் கொதிந்து எழுந்து விடுவார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தார். அரசியலமைப்பு சட்டத்தை மாற்றவே, ஆட்சிக்கு வந்து உள்ளோம் என்று கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தார்.
கடும் எதிர்ப்பு
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து அவர் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
எம்.பி.,யாக இருந்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக கட்சி நடவடிக்கையில் இருந்து ஒதுங்கி இருந்தார். சட்டசபை தேர்தலில் கூட பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்ய அவர் வரவில்லை. வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் தகவல் வெளியானது.
ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக, அரசியலில் மும்முரமாக ஈடுபட ஆரம்பித்து உள்ளார். 'பட்கல் மசூதியை இடிப்போம்' என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். முதல்வர் சித்தராமையாவும் ஒருமையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
லோக்சபா தேர்தலில் மீண்டும் 'சீட்' வாங்க நினைக்கிறார். ஆனால் அவருக்கு 'சீட்' கொடுக்க, கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பா.ஜ., ஆட்சியில் சபாநாயகராக இருந்த விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, கார்வார் முன்னாள் எம்.எல்.ஏ., ரூபாலி நாயக்கும் 'சீட்' கேட்டு வருகின்றனர்.
மவுசு குறைந்தது
சமீபத்தில் உத்தர கன்னடா மாவட்ட பா.ஜ.,வுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, ரூபாலி நாயக் பரிந்துரை செய்தவர்களே அதிகம் செய்யப்பட்டனர்.
அனந்த்குமார் ஹெக்டே தனது ஆதரவாளர்கள் 10 பேரின், பெயர் பட்டியலை அனுப்பி வைத்து இருந்தார்.
அதில் இரண்டு பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இதன்மூலம் உத்தர கன்னடா மாவட்ட அரசியலில், அனந்த்குமார் ஹெக்டேவுக்கு இருந்த மதிப்பு, குறைந்து வருவது தெரியவந்து உள்ளது.
அவருக்கு லோக்சபா 'சீட்' கிடைப்பது டவுட் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஒரு காலத்தில் தன்னுடைய தயவால், கட்சிக்கு வந்த சிலர் தற்போது தனக்கு எதிராகவே செயல்படுகின்றனர் என்று, அனந்த்குமார் ஹெக்டே வருத்தத்தில் உள்ளர். சொந்த கட்சியினரே நெருஞ்சி முள்ளாக குத்துவதாக, ஆதரவாளர்களிடம் புலம்பி வருகிறார்.
- நமது நிருபர் -